Thursday, July 29, 2010

கலிபா உமர் இப்னு அல் கத்தாப் (ரலி) (586-644)

கலீபாக்களில் இரண்டாமவரும் நான்கு கலீபாக்களில் முக்கியமானவரும் ஆவார். எல்லாம் வல்ல வணக்கத்திற்குரிய ஏக இறைவனான அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வயதில் இளையவரான உமர் (ரலி) அவர்கள் மக்காவிலே பிறந்தார். அன்னார் பிறந்த ஆண்டு சரியாக அறியப்படவில்லை. அனேகமாக கி.பி 586 ஆம் ஆண்டாக இருக்கலாம்.

ஆரம்பத்தில் உமர் (ரலி) அவர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய மார்க்கத்திற்கு கடுமையான எதிரியாக இருந்தார். ஆனால் அல்லாஹ்வின் அளப்பரிய கிருபையால் திடீரென்று அவர் சத்திய மார்க்கமாம் இஸ்லாத்தில் சேர்ந்து அதன் வலிமைமிக்க ஆதரவர்களில் ஒருவரானார்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஆலோசகர்களில் ஒருவராய் அவர்கள் ஆகி அன்னாரின் இறுதி நாள் முழுவதும் அவ்வாறே இருந்து வந்தார்கள். தமக்கு பின் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை குறிப்பிடாமலேயே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கி.பி 632 -ல் காலமானார்கள் (இன்னா லில்லாஹி..). உடனேயே உமர் (ரலி) அவர்கள் சிறிதும் தயக்கமின்றி முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நெருங்கிய தோழரான அபூபக்கர் (ரலி) அவர்களே தலைமையை ஏற்க வேண்டுமென்று ஆதரவு தெரிவித்தார். இதனால் பதவிப் போட்டி தவிர்க்கப்பட்டு அபூபக்கர் (ரலி) அவர்களே முதல் கலிபாவாக ஆட்சி பொறுப்பினை ஏற்றார்கள்.

உமர் (ரலி) அவர்கள் கி.பி 634 -ல் பதவி ஏற்று கி.பி 644 வரை பதவியில் இருந்தார். அந்த ஆண்டில் பாரசீக அடிமை ஒருவன் மதீனாவில் உமர் (ரலி) அவர்களை கத்தியால் குத்திவிட்டான். மரணப்படுக்கையில் இருந்த உமர் (ரலி) அவர்கள் தமக்குப் பின் ஆறுபேர் கொண்ட ஒரு குழுவினை அமைத்து அவர்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென ஏற்பாடு செய்தார். இவ்வாறாக மீண்டும் பதவிப் போட்டி தவிர்க்கப்பட்டது. இந்த குழு மூன்றாம் கலிபாவாக உதுமான் (ரலி) அவர்களை தேர்ந்தெடுத்தது. உதுமான் (ரலி) அவர்கள் கி.பி 644 முதல் கி.பி 656 வரை ஆட்சி செய்தார்கள்.

உமர் (ரலி) அவர்களுடைய பத்தாண்டு கிலாபத்தின்போது தான் அரபுகளுக்கு பல முக்கிய வெற்றிகள் கிட்டின. உமர் (ரலி) அவர்கள் பதவி ஏற்ற சிறிது காலத்தில், அப்போது பைஸாந்திய பேரரசின் ஒரு பகுதியாக இருந்த சிரியாவும் பாலஸ்தீனும் அரபு ராணுவ படையெடுப்புக்கு இலக்காகின. யர்முக் போரில் (கி.பி 636) அரபுகள் பைசாந்தியப் பேரரசினை தோற்கடித்து பெரும் வெற்றி கண்டனர். அதே ஆண்டு டமாஸ்கசும் (திமிஷ்க்கும்) வீழ்ந்தது. இரண்டாண்டுகளுக்கு பின்னர் ஜெருசேலமும் சரணடைந்தது. கி.பி 641 -க்குள் பாலஸ்தீன் முழுவதையும், சிரியாவையும் அரபுகள் வெற்றி கொண்டு இன்றைய துருக்கியாக அறியப்படும் நாட்டையும் நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தனர். கி.பி 631 -ல் பைஸாந்திய ஆட்சியின் கீழிருந்த எகிப்தின் மீது அரபு ராணுவம் படையெடுத்தது. மூன்று ஆண்டுகளுக்குள் எகிப்தும் முழுமையாக வெற்றிகொள்ளப்பட்டது.

உமர் (ரலி) அவர்கள் பதவி ஏற்பதற்கு முன்னதாகவே, அப்போது பாரசீகர்களின் ஸஸ்ஸானிய பேரரசின் ஒரு பகுதியாக இருந்த ஈராக் மீது தாக்குதல் தொடங்கப்பட்டது. கி.பி 641 க்குள் ஈராக் முழுமையும் அரபு ஆதிக்கத்தின் கீழ் வந்துவிட்டது. அதுமட்டுமல்ல அரபு ராணுவம் பாரசீகத்தின் மீதே படையெடுத்தது. நஹாவந்துப் போரில் கடைசி ஸஸ்ஸானிய பேரரசின் படைகள் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டன. உமர் (ரலி) அவர்கள் கி.பி 644 ல் காலமானார் (இன்னா லில்லாஹி..). அப்போதே கிழக்கு ஈரானியப் பகுதியும் கைப்பற்றப்பட்டுவிட்டது.

உமர் (ரலி) அவர்கள் காலமான பின்னரும் கூட ராணுவத்தின் வேகம் குறையவில்லை. கிழக்கே அவை பாரசீகம் முழுவதையும் கைப்பற்றின. மேற்கே ஆப்ரிக்காவை நோக்கி அவை முன்னேறின. உமர் (ரலி) அவர்களுடைய வெற்றிகளின் பரப்பு எவ்வவளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அவை நிரந்தரமாகவும் இருந்தன என்பதுதான்.

ஈரானிய மக்கள் இஸ்லாத்தை தழுவினர் என்றாலும் இறுதியில் அவர்கள் அரபுகளின் ஆட்சியிலிருந்து தம் சுதந்திரத்தை மீட்டுக் கொள்ளவில்லை. இந்நாடுகள் முழுமையாக அரபுமயமாகின என்பதுடன் இன்றளவும் அவ்வாறே இருந்து வருகின்றன.

தம்முடைய படைகள் வெற்றிகொண்ட இப்பரந்த பேரரசை முறையாக ஆட்சி செய்வதற்குரிய திட்டங்களை உமர் (ரலி) அவர்கள் வகுக்க வேண்டியதாயிற்று. அரபுகள் சலுகைகள் பெற்ற ராணுவப் பிரிவினராகத் தாங்கள் வெற்றி கொண்ட வட்டாரங்களில் வாழ வேண்டும் என்றும் அந்தந்த நாட்டு மக்களிடமிருந்து விலகி கோட்டைகளுடைய நகரங்களுக்குள் இருக்க வேண்டும் என்றும் உமர் (ரலி) அவர்கள் முடிவெடுத்தார்.

பெருவாரியாக அரபுகளாக இருந்த முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு குடிமக்கள் திரை செலுத்தி வர வேண்டும். மற்றபடி அவர்களுடைய வாழ்கையில் எவ்வித தலையீடுமின்றி அவர்களை அமைதியாக வாழ விட்டுவிட வேண்டும். இன்னும் குறிப்பாக அவர்களை இஸ்லாத்தில் சேருமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் அன்னார் வழி செய்தார்கள். இதிலிருந்து அரபுகளின் போர் வெற்றிகளுக்கு தேசிய விரிவாக்கம் நோக்கமாக இருந்ததே தவிர அவை மதத்தை பரப்பும் புனிதப் போர் அல்ல என்பது தெளிவாகும். எனினும் மத அம்சமும் இல்லாமலில்லை.

உமர் (ரலி) அவர்களுடைய சாதனைகள் நிச்சயமாக எவர் மனதிலும் ஆழ்ந்து பதிந்து நிற்கக் கூடியவை. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னர் இஸ்லாம் வேகமாகப் பரவியதற்கு உமர் (ரலி) அவர்களே முக்கியமான காரணப் புருஷரராக விளங்குகிறார்கள். அவர்களுடைய வேகமான வெற்றிகள் இல்லாதிருந்தால் இஸ்லாம் இன்றிருக்கும் அளவுக்குப் பரவியிருக்குமா என்பது சந்தேகம்தான். அன்றியும் அன்னார் காலத்தில் வெற்றி கொள்ளப்பட்ட நாடுகளில் பல இன்றும் அரபுத்தன்மையுடையதாகவே இருக்கின்றன. இவ்வளர்ச்சிகளை முக்கியமாக இயக்கி வைத்தவர் என்ற நிலையில் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பெருமளவு பங்குண்டு. எனினும் உமர் (ரலி) அவர்களின் பங்களிப்பை புறக்கணிப்பது பெருந்தவறாகும். உமர் (ரலி) அவர்கள் கண்ட வெற்றிகள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தந்த ஊக்கத்தினால் மட்டுமல்ல (இஸ்லாமிய ஆட்சியின்) ஓரளவு விரிவாக்கம் நிச்சயமாக நிகழக் கூடியதுதான். ஆனால் உமர் (ரலி) அவர்களின் ஒளிமயமிக்க தலைமையின் கீழ் வெற்றிகண்ட அளவுக்கல்ல.

மேற்கத்திய நாடுகளில் அனேகமாக யாரென்றே அறியப்படாமல் இருப்பவரான உமர் (ரலி) அவர்கள் சாலமன், ஜூலியஸ், சீசர் போன்றவர்களுக்கு மேலே வரலாற்றில் இடம்பெற்றிருப்பது வியப்பொன்றுமில்லை. இருப்பினும் உமர் (ரலி) அவர்களின் தலைமையின் கீழ் அரபுகள் வெற்றி கொண்ட நிலங்கள் அவற்றின் பெருபரப்பையும் அவை நிலையாக அவர்கள் ஆட்சியில் இருந்து வரும் கால அளவையும் கொண்டு கணக்கிட்டால் அவர் ஜூலியஸ், சீசர் மற்ற எவர்களின் வெற்றிகளைவிட உறுதியானதும் முக்கியத்துவமானதும் மற்றும் மகத்துவமிக்கதுமாகும். Source

உமர் (ரலி) அவர்களின் வீரம், துணிவு, அறிவாற்றல், சாதனைகள் மற்றும் தியாகங்கள் அவரை நிஜ வாழ்க்கையில் நாயகராகத் திகழ வைத்தது. அன்னாரின் மீது அன்னாரின் குடும்பத்தினர்கள் மீதும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவ நாம் பிரார்த்தித்துக் கொண்டே இருப்போம். நாம் அவருடைய தியாகங்களை போற்றுவோம். அன்னார் வாழ்ந்த வழிமுறை அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழி. ஏக இறைவனின் வழி. அமீருல்- முஹ்மினீன் உமர் (ரலி) மற்றும் சஹாபாக்களின் தியாகங்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டுமானால் நாம் இணைவைப்பதிலிருந்து விலகி அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் காட்டிய நேர் வழியில் நிலைத்து உறுதியாக எப்படி சஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களுக்கு உறுதுணையாக நின்று மார்க்கத்தை நிலைநாட்டினார்களோ அதுபோல நிற்போம். மார்கத்தின் பெயரால் அரங்கேறும் அனாச்சாரங்களை வேரறுப்போம். அந்த அனாச்சாரங்களை புகுத்துபவர்களை கண்டறிந்து தவிர்ப்போம். அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக!

0 comments:

Post a Comment