Thursday, February 16, 2012

மாமனிதர் நபி(ஸல்) - 14 (அரசுக் கருவூலத்திருந்து எதையும் அனுபவிக்கவில்லை)

ஒரு பேரீச்சம் பழத்தைத் தமது பேரக் குழந்தை சாப்பிட்டதைக் கூட அவர்கள் கண்டித்ததை முன்னர் குறிப்பிட்டிருந்தோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் எவருக்கும் அவர்கள் ஏழைகளாகவே இருந்தாலும் அரசுக் கருவூலத்திருந்து எதையும் கொடுக்க மாட்டார்கள்.

இதெல்லாம் நபிகள் நாயகத்தின் குடும்பத்தினருக்குத் தெரியும். ஆயினும் ஸகாத் நிதியை வசூக்கும் வேலையில் சேர்ந்து அந்த வேலைக்காக ஊதியம் பெறுவது தவறில்லை என்று கருதியதால் தான் இவ்வாறு அந்த வேலையைக் கேட்டு வந்தனர். 

ஆனால் அதற்கும் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. திருமணம் செய்யக் கூட வசதியில்லை என்ற நியாயமான காரணத்திற்காக அவர்கள் வேலை வாய்ப்பைக் கேட்ட போதும் தமது குடும்பத்தார் என்ற காரணத்திற்காக மறுக்கிறார்கள். மற்றவர்களுக்குக் கிடைக்கும் உரிமைகளையும், சலுகைகளையும் கூட தமது குடும்பத்தினர் அனுபவிக்கக் கூடாது என்று அறிவித்து நடைமுறைப்படுத்திக் காட்டிய ஒரே தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) திகழ்கிறார்கள்.

பத்து வருட காலம் ஆட்சி புரிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தமது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இது போன்ற பதவிகளைப் பெற்று விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்கள்.

நேர்மையான ஆட்சியாளர் என்று நற்பெயர் எடுத்தவர்கள் கூட தகுதியுடைய தமது குடும்பத்தினருக்குப் பதவிகளையும், வேலை வாய்ப்பையும் வழங்காமல் இருந்ததில்லை.

இந்த மாமனிதரோ தமது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது போன்ற வேலைகளைக் கூட தரக் கூடாது என்பதை அடிப்படைக் கொள்கையாகவே வைத்திருந்தார்கள்.

'இவ்வூரும், இந்த மாதமும் எவ்வாறு புனிதமாக உள்ளதோ, அவ்வாறே உங்கள் உயிர்களும், உடமைகளும் புனிதமானவை. அறிந்து கொள்க! அறியாமைக் கால நடவடிக்கைகள் அனைத்தையும் என் காலுக்கடியில் மிதித்துப் புதைக்கிறேன். அறியாமைக் காலத்தில் நடந்த எல்லாக் கொலைகளுக்கும் பொது மன்னிப்பு அளிக்கப்படுகின்றது. முதன் முதல் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ரபீஆவின் மகனுடைய கொலையை நான் மன்னிக்கிறேன். அறியாமைக் காலத்து வட்டிகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. முதன் முதல் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அப்பாஸின் வட்டியை நான் தள்ளுபடி செய்கிறேன். அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன' என்று நபிகள் நாயகம் (ஸல்) வரலாற்றுச் சிறப்பு மிக்க இறுதிப் பேருரையில் பிரகடனம் செய்தார்கள்.நூல் : முஸ்லிம் 2137

இந்தப் பிரகடனத்தில் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகத்தான பல பண்புகள் வெளிப்படுகின்றன.

மனித உயிர்களை மவாகக் கருதிய சமுதாயத்திற்கு வழிகாட்ட அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அற்பமான காரணங்களுக்குக் கூட அந்தச் சமுதாயம் மற்றவரின் உயிரைப் பறித்து வந்தது.

அது மட்டுமின்றி கொன்றவர்களைப் பழிவாங்க இயலாவிட்டால் பல தலைமுறைகளுக்குப் பிறகாவது கொலையாளியின் குடும்பத்தில் ஒருவரைக் கொல்ல வேண்டும் என்று கொல்லப்பட்டவனது குடும்பத்தார் வெறி பிடித்து அலைந்தனர். தமது மக்களுக்கு இது குறித்து மரண சாசனம் செய்வார்கள்.

இந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு தியாகங்களுக்குப் பின் அரபகத்துக்கு அதிபதியானார்கள்.

உயிர்கள் மட்டுமின்றி பிறர் உடமைகளுக்கும் அந்தச் சமுதாயத்தில் எந்த மரியாதையும் இருக்கவில்லை. வலிமையுள்ளவர் வலிமையற்றவரின் பொருளைச் சர்வ சாதாரணமாகப் பிடுங்கிக் கொள்வார்.

இந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) மேற்கண்ட பிரகடனத்தைச் செய்கிறார்கள்.

மக்கா என்ற நகரம் மட்டுமின்றி, மனிதனின் உயிர்களும், உடமைகளும் கூடப் புனிதமானவை எனப் பிரகடனம் செய்கிறார்கள். புனிதமான இடத்தில், ஊரில் எவ்வாறு அதன் புனிதத்தைப் பேணுவீர்களோ அவ்வாறே மற்றவரின் உயிரையும் புனிதமாகக் கருதிப் பேண வேண்டும்; மற்றவர்களில் பொருட்களையும் புனிதமாகக் கருத வேண்டும் எனக் கட்டளை இடுகிறார்கள். பிற மனிதர்களின் உயிரையும், உடமையையும் புனிதமானவை எனப் பிரகடனம் செய்த ஒரே தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) திகழ்கிறார்கள்.

இந்தப் பிரகடனம் செய்யப்படுவதற்கு முன்னர் எத்தனையோ கொலைகள் அச்சமுதாயத்தில் நிகழ்ந்துள்ளன. அக்கொலைகளுக்காக சம்பந்தப்பட்டவர்கள் பழி வாங்க நினைப்பது இயல்பான ஒன்று தான்.

இனி மேல் கொலை செய்வது முற்றிலுமாகத் தடை செய்யப்படுகிறது என்று கூறினால் பாதிக்கப்பட்டவர்கள் இதை ஏற்றுக் கொள்வது கஷ்டமாக இருக்கும். ஏற்கனவே நடந்த கொலைக்குப் பழி வாங்க வேண்டும் என்ற உணர்வை அவர்களால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படலாம்.

ஏற்கனவே நடந்த கொலைகளை மன்னித்து விடுங்கள் எனக் கூறினால் உமது குடும்பத்தில் யாரேனும் கொல்லப்பட்டால் இவ்வாறு கூறுவீரா? என்று பாதிக்கப்பட்டவர்களுக்குத் தோன்றலாம்.

இன்றைக்கு நமது நாட்டிலும், வேறு சில நாடுகளிலும் கொலையாளிகளை மன்னிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் இவ்வாறு மன்னிக்கும் போது 'இவரது மகன் கொல்லப்பட்டால் மன்னிப்பாரா?' என்று பாதிக்கப்பட்டவன் நினைப்பதைக் காண்கிறோம்.

ஆனால் 'கொலை செய்வது இன்று முதல் குற்றமாக்கப்படுகின்றது; இதற்கு முன் நடந்த கொலைகள் மன்னிக்கப்படுகின்றன' என்ற பிரகடனத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யும் போது முதல் தமது குடும்பத்தில் நடந்த கொலையை மன்னிக்கிறார்கள்.

ரபீஆ (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தைக்கு ஒன்று விட்ட சகோதரர். அவரது மகனைத் தான் ஹுதைல்' என்ற கூட்டத்தார் கொலை செய்திருந்தனர். தம் சகோதரர் மகனை (தம்பியை அல்லது அண்ணனை) கொலை செய்தவர்களை முதல் மன்னிப்பதாக அறிவிக்கிறார்கள். தமது குடும்பத்தார் அனைவரிடமும் இது பற்றிப் பேசி அவர்கள் அனைவரையும் மன்னிக்கச் செய்து தாமும் மன்னிக்கிறார்கள்.

தாம் கூறுவதை தமது குடும்பத்திருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்ற இந்தப் பண்பின் காரணமாகவே அவர்கள் மாமனிதர் எனப்படுகிறார்கள்.

அது போல் வட்டி வாங்குவது இதற்கு முன் தடை செய்யப்படாமல் இருந்தது. அந்தக் கால கட்டத்தில் மிகப் பெரிய அளவில் வட்டித் தொழில் செய்தவர் நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) ஆவார்.
வட்டியைத் தடை செய்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதற்கு முன் யாரெல்லாம் வட்டிக்குக் கடன் கொடுத்தார்களோ அவர்கள் அசலை மட்டும் தான் வாங்க வேண்டும்; ஏற்கனவே பேசப்பட்ட வட்டியானாலும் அதை வாங்கவும், கொடுக்கவும் கூடாது என்று பிரகடனம் செய்தார்கள்.

'தம்மிடமிருந்தே எதையும் ஆரம்பிக்க வேண்டும்' என்ற கொள்கையின் காரணமாக தமது பெரிய தந்தையின் வட்டிகள் அனைத்தையும் முதல் தள்ளுபடி செய்தார்கள்.

எனது பெரிய தந்தையிடம் வட்டிக்குக் கடன் வாங்கியவர் அசலை மட்டும் கொடுத்தால் போதும். வட்டியைக் கொடுக்கக் கூடாது என்று அறிவிப்புச் செய்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்தப் பிரகடனத்தில் மற்றொரு முக்கியமான விஷயமும் அடங்கியுள்ளது.

இன்றைக்குச் சட்டங்களை இயற்றுவோர் எதிரிகளைப் பழிவாங்கிட முன் தேதியிட்டு சட்டங்களை அமுல்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நடந்த குற்றங்களைப் புதிதாக இயற்றப்படும் சட்டத்தின் கீழ் கொண்டு வருவது மாபெரும் அநீதி என்ற சாதாரண அறிவு கூட யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.
தாம் வகுத்த எந்தச் சட்டத்தையும் தம்மிடமிருந்தும் தமது குடும்பத்திலிருந்தும் ஆரம்பிக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். தம்முடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சட்டத்தை மீறினால் மற்றவர்களை விட கடுமையாக அவர்களைத் தண்டிப்பதும் நபிகள் நாயகத்தின் வழக்கம்.

ஸகாத் நிதியை வசூலிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். அப்போது இப்னு ஜமீல் (ரலி), காலித் பின் வலீத் (ரலி), அப்பாஸ் (ரலி) ஆகிய மூவர் ஸகாத் கொடுக்க மறுத்தனர். இது பற்றி நபிகள் நாயகத்திடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இப்னு ஜமீல் ஏழையாக இருந்தார். அல்லாஹ்வும், அவனது தூதரும் அவரை வசதி படைத்தவராக ஆக்கினார்கள் என்பதற்காகவே ஸகாத் தர மறுக்கிறார். காலித் தனது கவச உடைகளையும், தளவாடங்களையும் அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணித்தவர். எனவே (அவரிடம் ஸகாத் கேட்டதன் மூலம்) அவருக்கு நீங்கள் அநீதி இழைக்கிறீர்கள். அப்பாஸ் அல்லாஹ்வின் தூதராகிய எனது பெரிய தந்தையாக இருக்கிறார். அவர் தன் மீது கடமையான ஸகாத்தைத் தர வேண்டும். மேலும் அது போல் இன்னொரு மடங்கும் அவர் மீது உள்ளது' என்று கூறினார்கள்.நூல் : புகாரி: 1468

காலித் (ரலி) ஸகாத் தராமல் இருந்ததை நபிகள் நாயகம் மன்னிக்கிறார்கள். ஏனெனில் அதை விட அதிகமாகவே அவர் ஏற்கனவே கொடுத்துள்ளார். இப்னு ஜமீல் (ரலி) ஸகாத் கொடுக்க மறுப்பது தவறு தான் எனக் கூறுகிறார்கள். அதாவது அவரிடம் கட்டாயம் ஸகாத் வசூலிக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் தமது பெரிய தந்தையிடம் ஸகாத்தையும் வசூலிப்பதுடன் அதே அளவு அபராதமாகவும் வசூலிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள்.
சட்டத்தை மதிக்காத மூவரில் தமது குடும்பத்தினருக்கு மட்டும் அபராதம் விதித்தன் மூலம் குடும்பப் பாசத்தை வென்று காட்டுகிறார்கள்.

பிறர் நலம் பேணல்ஆட்சித் தலைவர்களானாலும், ஆன்மீகத் தலைவர்களானாலும் ஊரை வளைத்துப் போடுவது, அவர்களின் தகுதிகளில் ஒன்றாகவே ஆகிவிட்டதை நாம் காண்கிறோம்.

தமக்காகவும், தமது கட்சிக்காகவும், இயக்கத்துக்காவும் பொது மக்களின் நிலங்களை வளைத்துப் போடுவதை எவ்வித உறுத்தலு மின்றி செய்து வருவதை நாம் காண்கிறோம். தமக்காக வளைத்துப் போடுவதில் ஒளிவு மறைவான போக்கைக் கடைப்பிடித்தாலும் தமது கட்சிக்காகவும், இயக்கத்திற்காகவும் இடங்களை வளைத்துப் போடுவதில் எவ்வித உறுத்தலும் அவர்களுக்கு இருப்பதில்லை.

ஆன்மீகத் தலைவர்களின் மடங்களுக்காகவும் இத்தகைய நிலை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாற்றில் ஒரு நிகழ்ச்சியைக் காணுங்கள்!

அபூதல்ஹா (ரலி) மதீனாவில் அதிக அளவு பேரீச்சை மரங்கள் வைத்தி ருந்ததன் காரணமாக அதிக வசதியுடையவராக இருந்தார். அவரது சொத்துக் களில் பைருஹா' எனும் தோப்பு அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலுக்கு எதிரில் அமைந்திருந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அங்கே அடிக்கடி சென்று, அங்குள்ள சுவையான தண்ணீரை அருந்துவது வழக்கம். இந்த நிலையில், 'நீங்கள் விரும்புவதிருந்து செலவு செய்யாத வரை நன்மையை அடையவே மாட்டீர்கள்' என்ற வசனம் (3:92) இறங்கியது. அப்போது அபூதல்ஹா (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் விரும்புவதிருந்து செலவிடாத வரை நன்மையை அடையவே மாட்டீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். எனக்கு மிகவும் விருப்பமான சொத்து பைரூஹா எனும் தோப்பு தான். எனவே அது அல்லாஹ்வுக்காக தர்மமாக ஆகட்டும். அதன் நன்மையையும், பயனையும் அல்லாஹ்விடம் நான் எதிர்பார்க்கிறேன். எனவே நீங்கள் விரும்பும் வகையில் இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்' எனக் கூறினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'வேண்டாம்! அது இலாபம் தரும் சொத்தாயிற்றே! அது இலாபம் தரும் சொத்தாயிற்றே! நீ கூறுவது எனக்கு விளங்குகிறது. அதை உமது உறவினர்க்கு நீர் அளிப்பதையே நான் விரும்புகிறேன்' என்று கூறினார்கள். அதற்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் 'அல்லாஹ்வின் தூதரே! அவ்வாறே செய்கிறேன்' என்றார். அதைத் தமது உறவினர்களுக்கும், தமது சிறிய தந்தையின் உறவினர்களுக்கும் வழங்கினார். இதை அபூதல்ஹா (ரலி) பராமரிப்பில் வளர்ந்த அனஸ் (ரலி) அறிவிக்கிறார். நூல் : புகாரி 1461, 2318, 2769, 4555, 5611

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பள்ளிவாசல் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலைமைச் செயலகமாக இருந்தது. அங்கு தான் இஸ்லாமிய அரசின் அனைத்து நடவடிக்கைகளும் நடைபெற்று வந்தன. அந்தப் பள்ளிவாசலை ஒட்டிய சிறிய குடிசையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசித்தும் வந்தனர்.

நீதிமன்றமாகவும், போர்ப் பயிற்சி அளிக்கும் இடமாகவும், அரசின் கருவூலமாகவும், தொழுகை நடத்தும் இடமாகவும், கைதிகளைப் பராமரிக்கும் இடமாகவும் அந்தப் பள்ளியின் வளாகம் அமைந்திருந்தது. ஒரு அரசின் அனைத்துப் பணிகளையும், ஆன்மீகப் பணியையும் நிறைவேற்றிட அந்த இடம் போதுமானதாக இருக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீடும் போதுமான பரப்பளவு கொண்டதாக இருக்கவில்லை. ஒருவர் தொழுதால் இன்னொருவர் தூங்க இடமிருக்காது என்பது தான் அவர்கள் வீட்டின் நிலை. (இது பற்றி முன்னர் விளக்கப்பட்டுள்ளது)

இந்த நிலையில் பள்ளிவாசலுக்கு எதிரிலேயே மதிப்புமிக்க ஒரு சொத்து கிடைக்கிறது. அதுவும் அதன் உரிமையாளரால் மனப்பூர்வமாக அளிக்கப்படுகிறது. அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் தீர்மானிக்கும் உரிமையும் நபிகள் நாயகத்திடமே உரிமையாளரால் வழங்கப்படுகிறது. சுவையான தண்ணீரும் அதில் கிடைக்கிறது, அந்தத் தண்ணீரில் நபிகள் நாயகத்துக்கு நாட்டமும் இருந்தது.

இந்த நிலையில் ஒருவர் மனமுவந்து அளிக்கும் அந்தத் தோப்பை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெற்றுக் கொண்டிருக்கலாம். தமக்காக இல்லாவிட்டாலும், அரசு மற்றும் ஆன்மீகப் பணிகளுக்குத் தேவை என்ற அடிப்படையில் அதைப் பெற்றுக் கொண்டிருக்கலாம். பொதுவாக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலுக்கு அருகில் இது போன்ற இடம் கிடைக்காது. யாரும் சொத்துக்களை விற்கவும் முன்வர மாட்டார்கள்.

மேலும், இதை அல்லாஹ்வுக்காக வழங்க முன் வருபவர் ஏழையாக இருக்கவில்லை. இதை அவரிடமிருந்து பெற்றுக் கொள்வதால் அவரது எதிர்காலம் கேள்விக்குறியாக ஆகப் போவதில்லை. அவரது சொத்துக்களைப் பொருத்த வரை இது சிறிய அளவே என்பதால் அவரது வாரிசுகளோ, உறவினர்களோ பாதிக்கப்பட மாட்டார்கள்.

ஆனாலும் இந்த மாமனிதர், இருக்கின்ற அந்த இடமும், குடிசையுமே போதும் என்று நினைத்தார்கள். முதல் உறவினரைத் தான் கவனிக்க வேண்டும் என்று தாம் போதனை செய்து வந்ததை, தமக்காக மாற்றிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை. உமது உறவினருக்கே வழங்குவீராக' என்று வலியுறுத்தி, அவ்வாறே செய்யச் சொல்கிறார்கள். இவை அனைத்தையும் மேற்கண்ட நிகழ்ச்சியிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

அத்துடன் அவர்கள் நிறுத்திக் கொள்ளவில்லை. அது இலாபம் தரும் சொத்தாயிற்றே என இரு முறை கூறி, அதற்குப் பதிலாக வேறு சொத்தைக் கொடுக்கலாமே என்ற அறிவுரையையும் கூறுகிறார்கள்.

இந்தப் பண்பிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள்.

பிறர் சிரமப்படுவதைக் கண்டால் அதைப் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். இதுவும் நபிகள் நாயகத்தின் பண்பாக இருந்தது.

நபிகள் நாயகத்தின் வீட்டு வாசலில் இரண்டு பேர் குரலை உயர்த்தி வாய்ச்சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் தனது கடனில் சிறிதளவைத் தள்ளுபடி செய்யுமாறும், மென்மையாக நடக்குமாறும் கேட்டார். அதற்கு மற்றவர் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக இவ்வாறு நான் செய்ய மாட்டேன்' என்று கூறினார். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உடனே வெளியே வந்து 'நன்மை செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தவர் யார்?' என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர் 'அல்லாஹ்வின் தூதரே! நான் தான்; இவர் எதை விரும்புகிறாரோ அதன்படியே செய்கிறேன்' எனக் கூறினார்.நூல் : புகாரி: 2705

மற்றவருக்கு உதவ முடியாது என்று சத்தியம் செய்வதைக் கூட இந்த மாமனிதரால் ஏற்க முடியவில்லை.

மன்னரின் வீட்டருகில் இரண்டு பேர் சண்டையிட்டால் இருவரையும் விரட்டியடிக்குமாறு தான் கூறுவார்கள். ஆனால் இந்த மாமன்னரோ அது என்ன சண்டை என்று உன்னிப்பாகக் கவனித்து பலவீனமானவருக்குச் சார்பாக களமிறங்குவதைக் காண்கிறோம்.

இது போன்ற மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்!

கஃபு பின் மாலிக் (ரலி), இப்னு அபீ ஹத்ரத் (ரலி)க்கு கடன் கொடுத்திருந் தார். அந்தக் கடனை பள்ளிவாசலில் வைத்து திருப்பிக் கேட்டார். இருவரின் சப்தங்களும் உயர்ந்தன. தமது வீட்டில் இருந்த நபிகள் நாயகத்துக்கு இது கேட்டது. உடனே இருவரையும் நோக்கி வந்தார்கள். 'கஃபே!' என்று அழைத்த போது 'வந்தேன் அல்லாஹ்வின் தூதரே!' என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதி' என்பதை தமது கையால் சைகை செய்து காட்டி 'இந்த அளவு தள்ளுபடி செய்' என்றார்கள். 'அல்லாஹ்வின் தூதரே அவ்வாறே செய்கிறேன்' என்று கஃபு கூறினார். 'நீ சென்று கடனை அடைத்து விடு' என்று மற்றவரிடம் கூறினார்கள்.நூல் : புகாரி: 457, 471, 2418, 2424, 2706, 2710

கடன் வாங்கியவர் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருப்பதையும், கடன் கொடுத்தவர் நல்ல நிலையில் இருப்பதையும் நபிகள் நாயகம் காண்கிறார்கள். பாதிக் கடனைத் தள்ளுபடி செய்தால் கடன் வாங்கியவர்ரால் திருப்பிச் செலுத்த முடியும் என்பதையும் உணர்ந்து அவ்வாறு பரிந்துரை செய்கிறார்கள்.

இது போன்ற கொடுக்கல் வாங்கல் தகறாரின் போது நம்மைப் போன்ற சாதாரண மக்களே கண்டு கொள்ளாமல் ஒதுங்கிச் சென்று விடுவோம். முக்கியப் பிரமுகர்கள் என்றால் இது போன்ற காரியங்களை வேண்டாத வேலை என ஒதுக்கி விடுவார்கள்.

ஆனால் மாமன்னராகவும், மாபெரும் ஆன்மீகத் தலைவராகவும் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாங்கிய கடனைக் கொடுக்க முடியாமல் ஒருவர் சிரமப்படுவதைக் கண்ட பின் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து உதவுகிறார்கள்.

மக்கள் சிரமப்படுகிறார்கள் என்றால் போலி சம்பிரதாயங்களைக் கூறி மக்களைக் கஷ்டப்பட விடமாட்டார்கள். கஷ்டப்படுவோருக்கு உதவுவதற்குத் தடையாக மத நம்பிக்கை இருக்கக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.

அபூ மூஸா (ரலி) கூறுகிறார்:நான் சிறு கூட்டத்தினருடன் நபிகள் நாயகத்திடம் வந்து வாகனம் (ஒட்டகம் அல்லது குதிரை) கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'என்னிடம் வாகனம் இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களுக்கு வாகனம் எதையும் தர மாட்டேன்' எனக் கூறினார்கள். சிறிது நேரத்தில் அவர்களிடம் ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டன. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அஷ்அரி கோத்திரத்தைச் சேர்ந்த அந்தக் கூட்டத்தினர் எங்கே?' எனக் கேட்டார்கள். எங்களுக்கு உயர் தரமான ஐந்து ஒட்டகங்களைத் தந்தார்கள். நாங்கள் திரும்பச் சென்ற போது 'நாம் செய்த காரியத்தில் நமக்கு இறையருள் கிட்டாது' என்று கூறிக் கொண்டு நபிகள் நாயகத்திடம் வந்தோம். 'எங்களுக்கு வாகனம் தர முடியாது என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறினீர்களே? அதை மறந்து விட்டு எங்களுக்கு வாகனம் தந்து விட்டீர்களே' எனக் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நான் உங்களுக்கு வாகனம் தரவில்லை. அல்லாஹ் தான் தந்தான். நான் ஏதேனும் சத்தியம் செய்து விட்டு அதை விடச் சிறந்த காரியத்தைக் கண்டால் சத்தியத்தை முறித்து விட்டு சிறந்ததைத் தான் செய்வேன்' எனக் கூறினார்கள்.
நூல் : புகாரி: 3133, 4385, 5518, 6623, 6649, 6680, 6718, 6731, 7555

மனிதர்களுக்கு உதவி செய்யக் கூடாது என்பதற்கு மக்கள் எத்தனையோ தவறான நம்பிக்கைகளைக் கேடயமாக வைத்துள்ளனர்.

இரவில் உதவி கேட்டால் இரவு நேரத்தில் பணத்தை வீட்டை விட்டு வெளியே கொண்டு போகக் கூடாது என்பார்கள். அல்லது இந்த நாளில் தர முடியாது, இந்த நேரம் நல்ல நேரம் இல்லை என்றெல்லாம் கூறுவார்கள்.

பிறருக்கு உதவாமல் இருப்பதற்காகத் தான் இது போன்ற நம்பிக்கைகளை உருவாக்கியுள்ளனர்.

இந்த மாமனிதரோ தம்மிடம் எந்த வாகனமும் இல்லாததால் தர முடியாது என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறி விடுகிறார்கள்.

அந்த நேரத்தில் ஒட்டகங்கள் வந்து சேர்ந்தன. ஒட்டகங்கள் வந்ததைப் பார்த்து விட்டு அந்த மக்கள் மீண்டும் தமது கோரிக்கையை முன் வைக்கவில்லை. நபிகள் நாயகம் தான் தாமாக அவர்களை அழைக்கிறார்கள்.
உங்களுக்குத் தருவதற்கு என்னிடம் ஒட்டகங்கள் இப்போது வந்துள்ளன. ஆயினும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விட்டதால் அதைத் தர முடியாத நிலையில் இருக்கிறேன் எனக் கூறினால் அந்த மக்கள் எவ்வித வருத்தமுமின்றி அந்தச் சமாதானத்தை ஏற்றிருப்பார்கள்.

மக்களுக்கு உதவ மாட்டேன் என்று அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்தாலும் அதை நிறைவேற்றத் தேவையில்லை என்பதால் அவர்களுக்கு ஒட்டகங்களைக் கொடுத்து அனுப்பினார்கள். நபிகள் நாயகம் செய்த சத்தியத்தை மறந்து விட்டு நமக்குத் தந்து விட்டார்களோ என்று எண்ணி அம்மக்கள் நினைவு படுத்திய போது 'தெரிந்தே தான் இவ்வாறு செய்தேன். நல்லது செய்வதற்குத் தான் இறைவன் பெயரைப் பயன்படுத்த வேண்டும். நல்லது செய்ய மாட்டேன் என்பதற்காகப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் அதன் படி நடக்கத் தேவையில்லை. அதை விடச் சிறந்ததைத் தான் செய்ய வேண்டும். அது தான் எனது நிலை' என்று தெளிவுபடுத்துகிறார்கள்.

பொதுவாக தலைவர்கள் மக்கள் கருத்தை மதிப்பது கிடையாது. தாங்களாக ஒரு முடிவை எடுத்துக் கொண்டு மக்கள் மத்தியில் கருத்துக் கேட்பது போல் பாவனை செய்வார்கள். தலைவரின் கருத்துக்கு எதிர் கருத்துக் கூற இயல்பாகவே தயக்கம் ஏற்படும். இதைத் தமக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டு மக்களின் கருத்தாக அதைக் காட்டிக் கொள்வார்கள்.

இப்படித் தான் அமைச்சரவைக் கூட்டங்களும், இயக்கங்களின் பொதுக் குழுக்களும் இயங்கி வருகின்றன.

ஆனால் இந்த மாமனிதர் மக்களிடம் எந்த ஆலோசனை கேட்டாலும் மக்கள் சுதந்திரமாக கருத்துக் கூற எல்லாச் சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொடுப்பார்கள்.

ஹவாஸின் கூட்டத்தினர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு நபிகள் நாயகத்திடம் வந்தனர். தங்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை யும், தங்கள் கைதிகளையும் தங்களிடம் தர வேண்டும் என அல்லாஹ் வின் மீது சத்தியம் செய்து கோரிக்கை வைத்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'உண்மை பேசுவது தான் எனக்கு மிகவும் விருப்பமானது. கைதிகள் அல்லது பொருட்கள் இரண்டில் ஒன்றைக் கேளுங்கள்' என்றார்கள். இரண்டில் ஒன்றைத் தான் நபிகள் நாயகம் திருப்பித் தருவார்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்தவுடன் 'கைதி களையே நாங்கள் கேட்கிறோம்' என்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர் கள் முஸ்லிம்களைக் கூட்டினார்கள். அல்லாஹ்வை அவனது தகுதிக் கேற்ப புகழ்ந்தார்கள். பின்னர், 'உங்கள் சகோதரர்கள் திருந்தி வந்து விட்டனர். அவர்களின் கைதிகளை அவர்களிடம் திரும்ப ஒப்படைக்க நான் விரும்புகிறேன். உங்களில் கைதிகளை அடிமைகளாகப் பெற்றவர் களில் யார் மனப்பூர்வமாக விட்டுத் தருகிறாரோ அவ்வாறே அவர் தரட்டும். அல்லது கைதிகளை விடுவித்து விட்டு எதிர் காலத்தில் முதன் முதலாக அல்லாஹ் தருவதிலிருந்து பெற்றுக் கொள்ள சம்மதிப்பவர் அவ்வாறு செய்யட்டும்' என்றார்கள். அப்போது அனைவரும் 'அல்லாஹ்வின் தூதருக்காக மனப்பூர்வமாக விட்டுத் தருகிறோம்' என்றனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'உங்களில் இதை ஏற்பவர் யார்? ஏற்காதவர் யார்? என்பதை நம்மால் அறிய முடியவில்லை. நீங்கள் திரும்பச் சென்று நன்கு ஆலோசித்து உங்கள் பிரமுகர்கள் வழியாக முடிவைச் சொல்லி அனுப்புங்கள்' என்றார்கள். பின்னர் பிரமுகர்கள் வந்து 'அனைவரும் மனப்பூர்வமாக விட்டுத் தருகின்றனர்' எனக் கூறினார்கள்.நூல் : புகாரி: 2308, 2540, 2608, 3132, 4319, 2608

ஹவாஸின் கூட்டத்தினர் தோல்வியடைந்த பின் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களையும், கைதிகளையும் நபிகள் நாயகம் முஸ்லிம் போர் வீரர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து விட்டனர். போரில் பிடிக்கப்படுவோர் அடிமைகளாக நடத்தப்படுவது அன்றைய வழக்கம். அந்த அடிமைகளைத் தமது வேலைகளுக்காகவும் வைத்துக் கொள்ளலாம். அல்லது வசதியுள்ளவர்களிடம் விற்றும் விடலாம். இது அன்றைக்கு உலகம் முழுவதும் ஏற்கப்பட்ட நடைமுறையாக இருந்தது.
அந்த அடிப்படையில் போர்க் கைதிகள் முஸ்லிம்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப் பட்ட பின்னர் ஹவாஸின் கூட்டத்தினர் திருந்தி வந்தனர். தங்கள் கைதிகளையும் கேட்டனர்.

எனவே தான் கைதிகளைப் பெற்றவர்கள் மனப்பூர்வமாக விடுதலை செய்யுமாறு மக்களிடம் நபிகள் நாயகம் கேட்கிறார்கள். அவ்வாறு விருப்பமில்லாதவர்கள் விடுதலை செய்து விட்டு அடுத்தடுத்த போர்களில் வெற்றி கிடைக்கும் போது இதற்கு ஈடானதைப் பெற்றுக் கொள்ளலாம் என்று இரு திட்டங்களை முன் வைத்தார்கள்.

அனைவரும் மனப்பூர்வமாக விட்டுத் தர முன்வந்தனர். கூட்டத்தில் இவ்வாறு கூறுவதால் உண்மையிலேயே மனப்பூர்வமாக கூறுகிறார்களா என்பதை அறிய நபிகள் நாயகம் நினைக்கிறார்கள். திரும்பச் சென்று நன்கு ஆலோசனை செய்யச் சொல்கிறார்கள். மேலும் ஆலோசனை செய்து ஒவ்வொருவரும் நேரில் வந்து முடிவைக் கூறுங்கள் என்று கூறினால் அப்போது நபிகள் நாயகத்திடம் எதிர் கருத்து கூற தயக்கம் காட்டுவார்கள். எனவே தான் முடிவு செய்து பிரமுகர்கள் வழியாக உங்கள் முடிவைக் கூறுங்கள் என்றார்கள்.

இதனால் எந்தத் தனி நபரும் தயக்கம் காட்டும் நிலை ஏற்படாது. அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்கள் கருத்தை அறிய விரும்பி னால் இது போன்று தான் அறிய வேண்டும். அவர்கள் சுதந்திரமாகக் கருத்துக் கூறுவதற்கு ஏற்ப வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

அந்த அளவுக்கு மக்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் நபிகள் நாயகம் மதித்துள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் மீது யூதர்கள் சிலர் அவதூறு கூறினார்கள். இதை முஸ்லிம்களில் சிலரும் முன்னின்று மக்களிடம் பரப்பினார்கள். இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல நாட்கள் மனம் உடைந்து போனார்கள். பின்னர் இது அவதூறு என்று தெரிய வந்ததும் அவதூறு கூறியவர்களுக்கு எண்பது கசையடிகள் வழங்கப்பட்டன.

இவ்வாறு அவதூறு பரப்பியவர்களில் மிஸ்தஹ் என்பவரும் ஒருவர். இவர் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தார். இவருக்கு ஆயிஷா (ரலி)யின் தந்தை அபூபக்ர் (ரலி) பொருளாதார உதவிகள் செய்து வந்தார்.

மிஸ்தஹ் கூறியது அவதூறு என்று நிரூபிக்கப்பட்ட பின் அவருக்கு இனி மேல் உதவுவதில்லை என்று அபூபக்ர் (ரலி) அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து முடிவு செய்தார். அப்போது தான் கீழ்க்கண்ட வசனம் அருளப்பட்டது.

'உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்' என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். 'அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்' என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.(அல்குர்ஆன் 24:12)

இவ்வசனம் அருளப்பட்ட பின் 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக அல்லாஹ் என்னை மன்னிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்' என்று அபூபக்ர் (ரலி) கூறினார்.நூல் : புகாரி: 2661, 4141, 4750, 6679

தமது மனைவியின் மீது களங்கம் சுமத்தும் போது தான் மனிதன் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறான். அவ்வாறு பழி சுமத்துவேரை எளிதில் யாரும் மன்னிக்க மாட்டார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் நபிகள் நாயகத்தின் மனைவி மீது களங்கம் சுமத்தியவருக்கு உதவ மாட்டேன் என்று அபூபக்ர் (ரலி) சத்தியம் செய்த போது அது தவறு என்றும் அவருக்கு உதவுவதை நிறுத்த வேண்டாம் என்றும் இறைவனிடமிருந்து தமக்குச் செய்தி வந்ததாகக் கூறி உதவியைத் தொடரச் செய்கிறார்கள்.

பிறருக்கு உதவுவதைச் சடங்கோ, சம்பிரதாயமோ, முன் பகையோ, அவர் நமக்குச் செய்த தீங்கோ தடுக்கக் கூடாது என்பதில் நபிகள் நாயகம் எந்த அளவுக்கு உறுதியான நிலைபாட்டைக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு இந்த ஒரு நிகழ்ச்சியே போதுமானதாகும்.

நன்றி : www.onlinepj.com

1 comments:

ibnu abdul qadir said...

salam...
anbo tholarae naan pudhidhaaga oru inaiya thalam open pannirukkaen .....
mutrilum thowheedh (quran and sunnah ) mattumae vaeliyidappadum ...
indha inaiya thalathai anaivarukkum arimugam seiyungal ...
visit :
www.pudumadam.in

Post a Comment