Monday, March 26, 2012

மாமனிதர் நபி(ஸல்) - 15 (துணிவும் வீரமும்)

வீரம் நிறைந்த பலருடைய வரலாறுகளை நாம் அறிந்திருக்கிறோம். அவர்களின் வீரத்திற்கும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீரத்திற்கும் மிகப்பெரிய வேறுபாடிருக்கிறது.

அன்பு, இரக்கம், வள்ளல் தன்மை போன்ற பண்புகளைக் கொண்டவர்கள் மென்மையான சுபாவம் உடையோராக இருப்பதால் அவர்களிடம் வீரத்தைக் காண முடியாது. வீரர்கள் என அறியப்பட்டோரிடம் இரக்கத்தையும், மென்மையான சுபாவத்தையும் காண முடியாது. ஆனால் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நல்லவர்களிடமும், பொதுமக்களிடமும் மென்மையாக நடக்கும் வேளையில் களத்தில் எதிரிகளைச் சந்திக்கும் போது, மாவீரராகத் திகழ்ந்தனர் என்பது மற்ற வீரர்களிடம் இல்லாத தனிச்சிறப்பாகும்.

ஆன்மீகத் தலைவர்கள் பொதுவாக போர்களிலும், போராட்டங்களிலும் பங்கேற்பதில்லை. எவ்வளவு தான் அக்கிரமங்கள் கண் முன்னே நடந்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பது தான் உயர்ந்த நிலை என்று அவர்கள் நினைக்கின்றனர்.

நியாயத்தின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டும் என்ற பக்குவத் தைக் கூட இத்தகைய ஆன்மீகத்தால் ஏற்படுத்த முடியவில்லை. ஆனால் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனுக் காகவே தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ஆன்மீகத் தலைவராக இருந்தும் வீரத்தையும், துணிவையும் வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில் வெளிப்படுத்தத் தவறவில்லை. இதையும் ஆன்மீகத்தின் ஒரு அம்சமாகத் தான் அவர்கள் கருதினார்கள்.

அவர்களின் வீரத்தைப் பறைசாற்றும் ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம். நபிகள் நாயகம் (ஸல்) நஜ்து என்னும் பகுதியை நோக்கி போருக்குப் புறப்பட்டனர். அங்கிருந்து திரும்பும் போது முள் மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கில் ஓய்வு எடுக்க இறங்கினார்கள். மக்கள் நிழல் தேடி மரங்களை நோக்கிச் சென்று விட்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் ஒரு முள் மரத்தின் அடியில் தங்கினார்கள். அதில் தமது வாளைத் தொங்க விட்டனர். நாங்கள் சற்று நேரம் தூங்கினோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தனர். அப்போது அவர்கள் முன்னே ஒரு கிராமவாசி நின்று கொண்டிருந்தார். 'நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது இந்தக் கிராமவாசி எனது வாளை எடுத்துக் கொண்டார். நான் திடுக்கிட்டு எழுந்த போது என்னிடமிருந்து உம்மைக் காப்பவன் யார்? என்று கேட்டார். 'அல்லாஹ்' என்று மூன்று தடவை கூறினேன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) விவரித்தனர். அந்தக் கிராமவாசியை இதற்காக நபிகள் நாயகம் (ஸல்) தண்டிக்கவில்லை

மற்றொரு அறிவிப்பில், 'அல்லாஹ் என்று கூறியவுடன் அவரது கையில் இருந்த வாள் கீழே விழுந்தது' என்று கூறப்பட்டுள்ளது.
நூல் : புகாரி 4139, 2913, 2910

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தயவு தாட்சண்யம் இல்லாத வகையில் உண்மையை உடைத்துச் சொன்னதால் எதிரிகளைச் சம்பாதித்து வைத்திருந்தனர். அவர்களைக் கொல்வதற்கு பல வகையிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்ச்சியின் போது கூட அவர்கள் போருக்குச் சென்று விட்டுத் தான் திரும்புகின்றனர். இந்நிலையில் அவர்கள் நடந்து கொண்ட முறையைக் கவனியுங்கள். படை வீரர்கள் அனைவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தனியாக விட்டு விட்டு ஓய்வு எடுக்க மரங்களை நோக்கிச் சென்று விட்டனர். நபிகள் நாயகம் மட்டும் தனியாக ஒரு மரத்தடியில் உறங்கினார்கள்.

ஒரு நாட்டின் தலைவரும், தளபதியுமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனியாக விடப்பட்டிருக்கிறார்கள். மேலும் யுத்தத்திருந்து திரும்பும் வழியில் எதிரிகளின் தாக்குதல் அபாயம் நிறைந்திருக்கும்.

இந்நிலையில் அவர்களும் தனியாக மரத்தடியில் தங்குகிறார்கள். அவர்களின் படை வீரர்களும் தனியாகத் தங்களின் தலைவரை விட்டுச் செல்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அளவிட முடியாத துணிவு இதிலிருந்து வெளிப்படுகிறது. தனியாக ஓய்வெடுக்கும் போது கூட மரத்தின் மீது தமது வாளைத் தொங்க விட்டு விட்டு அயர்ந்து தூங்குவதென்றால் இதற்கு அசாத்தியமான துணிச்சல் இருக்க வேண்டும். அவர்களது வாளையே எடுத்துக் கொண்டு ஒருவர் கொல்ல முயற்சிக்கும் போது கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூப்பாடு போடவில்லை; தமது சகாக்களை உதவிக்கு அழைக்கவில்லை. மாறாக தன்னந்தனியாக எதிரியை மடக்கிப் பிடித்துக் கொண்டு அதன் பிறகு தான் மற்றவர்களை அழைத்தனர். நான் உன்னைக் கொல்லப் போகிறேன் என்று வாள் முனையில் மிரட்டப்பட்ட போதும் கொஞ்சமும் தளராமல் 'என்னை அல்லாஹ் காப்பாற்றுவான்' என்று கூறியதும் அவர்களின் மாவீரத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் கூட தமது படையினரைத் துணைக்கு அழைக்க அவர்கள் நினைக்கவில்லை என்றால் இது மாவீரர்களால் கூட சாத்தியமாகாதது. இறுதியில் தம்மைக் கொல்ல முயன்றவரைத் தண்டிக்காது மன்னித்து அனுப்பியது அவர்களின் பெருந்தன்மைக்கும், பொறுமைக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

அல்லாஹ்வைத் தவிர எவருக்கும், எதற்கும் அஞ்சக் கூடாது என்று அவர்கள் போதனை செய்து வந்ததற்கு அவர்களே முன்னுதாரணமாக நடந்து காட்டியதால் தான் மாமனிதர் என்று போற்றப்படுகின்றனர்.

அவர்களின் மாவீரத்துக்கும், அளவற்ற துணிச்சலுக்கும் உதாரணமாக மற்றொரு நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பத்தாண்டுகள் ஊழியராக இருந்த அனஸ் (ரலி) அறிவிக்கிறார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் அழகு படைத்தவர்களாகவும், மிகப்பெரும் வீரராகவும் திகழ்ந்தனர். ஒரு நாள் மதீனாவாசிகள் திடுக்கிட்டனர். உடனே வீட்டை விட்டு வெளியேறி (திடுக்கத்தை ஏற்படுத்திய) சப்தம் வந்த திசை நோக்கிப் புறப்பட்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கழுத்தில் வாளைத் தொங்கவிட்டு, அபூதல்ஹா (ரலி)யின் சேனம் பூட்டப்படாத குதிரையில் எதிரில் வந்தனர். அஞ்சாதீர்கள்! அஞ்சாதீர்கள்! என்று கூறிக் கொண்டே வந்தனர். '(வேகத்தில்) இக்குதிரை கடலாக இருக்கிறது' எனவும் குறிப்பிட்டனர். நூல் : புகாரி 2908, 2627, 2820, 2857, 2862, 2867, 2968, 2969, 3040, 6033, 6212

இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா நகரில் ஆட்சியை நிறுவிய பின் நடந்த நிகழ்ச்சியாகும்.

எல்லாவிதமான தீமைகளையும், தீயவர்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தயவு தாட்சண்யமின்றி எதிர்த்ததால், அவர்கள் அதிக அளவில் எதிரிகளைச் சம்பாதித்திருந்தனர். பலமுறை மதீனா நகரை நோக்கி எதிரிகள் படை திரட்டி வந்தனர். இந்த நிலையில் தான் ஒரு நாள் எதிரிப் படையினர் தாக்க வருவது போன்ற சப்தம் மதீனா நகர் முழுவதும் கேட்டது. எதிரிகள் தாக்கி விடக் கூடாது என்பதற்காக மக்கள் வீட்டை விட்டு வெளியேறி, சப்தம் வந்த திசையை நோக்கி விரைந்தனர்.

இந்தச் சப்தத்தைக் கேட்டவுடன் யாரும் தன்னந்தனியாக அந்தத் திசை நோக்கிச் செல்ல மாட்டார்கள். எனவே பலருக்கும் தகவல் சொல் போதுமான ஆட்களைத் திரட்டிக் கொண்டு நபித் தோழர்கள் சப்தம் வந்த திசையை நோக்கித் திரண்டார்கள்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, தோழர்களுக்கும் முன்னரே சப்தம் வந்த திசை நோக்கிச் சென்று கண்காணித்து விட்டு, பயப்படும்படி ஏதுமில்லை என்று அறிந்து கொண்டு மின்னல் வேகத்தில் திரும்பி வந்து மக்களுக்குத் தகவல் சொல்கிறார்கள்.

வேகமாக குதிரையில் பயணம் செய்வதென்றால், அதில் சேனம் பூட்டி வசதியாக அமர்ந்து கொண்டால் தான் சாத்தியமாகும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ சப்தம் கேட்டவுடன் சேனத்தைப் பூட்டுவதால் ஏற்படும் சிறு தாமதத்தையும் தவிர்க்க, சேனம் பூட்டாத குதிரையில் விரைகிறார்கள்.

சேனம் பூட்டாத குதிரையின் மேல் வேகமாக சவாரி செய்வதற்கு அதிகமான துணிச்சலும், உடல் வலுவும் அவசியம்.

ஒரு வேளை எதிரிகள் வந்தால் தன்னந்தனியாகவே அவர்களை எதிர் கொள்வது என்ற தைரியத்துடன் தான் வாளையும் எடுத்துக் கொண்டு சென்றனர்.

அபூ தல்ஹாவின் வீடு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிர் வீடாக இருந்தது. அவர் வசதி மிக்கவராகவும் இருந்தார். எனவே தான் அவரிடம் உடனடியாகக் குதிரையை இரவல் வாங்கிக் கொண்டு துணைக்கு அபூ தல்ஹாவைக் கூட அழைத்துக் கொள்ளாமல் புறப்பட்டனர்.

நள்ளிரவில், தன்னந்தனியாக, எதிரிகள் படை திரண்டு வருகிறார்களா? என்பதை அறிவதற்கு எவ்வளவு பெரிய வீரரும் தனியாகப் போக மாட்டார். 

அதுவும் மாபெரும் தலைவராக இருப்பவர்கள் இது போன்ற ஆபத்தான பணியில் நேரடியாக இறங்க மாட்டார்கள். இறங்கத் தேவையுமில்லை. யாரையாவது அனுப்பி தகவல் திரட்டி வருமாறு கூறினாலே போதுமானது.

ஆயினும் தலைமை ஏற்பவர் சமுதாயத்தைக் காக்கும் பொறுப்பையும் சுமக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொண்டு மற்றவர்களின் தூக்கத்தைக் கலைக்காமல் தாமே நேரடியாகக் களத்தில் இறங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கூறப்படும் ஒவ்வொரு சொல்லும் மாமனிதரின் மாவீரத்தைப் பறை சாற்றுகின்றன.

* எதிரிகள் படை திரட்டி வருகிறார்களோ என்ற அச்சம்
* தன்னந்தனியாகப் புறப்பட்டது
* ஆயுதம் தரித்துப் புறப்பட்டது
* சேனத்தைக் கூட பூட்டாமல், விரைவாக வெறும் குதிரையில் புறப்பட்டது
* மின்னல் வேகத்தில் சென்று மிக விரைவாகத் திரும்பியது

இவையாவும் எந்த வீரரிடமும் காண முடியாதது. எந்த ஆன்மீகத் தலைவரிடமும் எந்தத் தளபதியிடமும், எந்த மன்னரிடமும் காண முடியாததாகும்.

உயிரே போய் விடக் கூடும் என்ற இடத்துக்கு தனியாகப் புறப்பட்டுச் சென்ற இந்த வீரத்துக்கு நிகரான வீரத்தை வரலாற்றில் காணவே முடியாது.

இந்த நிகழ்ச்சி நடக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 53 வயதைக் கடந்திருந்தார்கள். அனைவரும் தளர்ந்து விடக் கூடிய வயதில் சேனம் பூட்டாத குதிரையில் மின்னல் வேகத்தில் ஏறிச் செல்ல உடல் நல்ல வலுவுடன் இருக்க வேண்டும்.
இது போல உஹதுப் போரின் போது முஸ்லிம்களுக்கு ஆரம்பத்தில் வெற்றி கிடைத்தாலும் இடையில் அவர்களுக்குப் பேரிழப்பு ஏற்பட்டது. தோற்று ஓடிய எதிரிகள் மலைக்குப் பின் புறமாக வந்து சுற்றி வளைத்த போது, செய்வதறியாமல் நபித் தோழர்கள் சிதறி ஓட்டம் பிடித்தனர். ஆனால் எதிரிகள் சுற்றி வளைத்துக் கொண்ட பின்பும், தமது தோழர் களில் பெரும்பாலானோர் சிதறி ஓடிய பின்பும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் களத்திருந்து ஓட்டம் பிடிக்கவில்லை. அபூதல்ஹா (ரலி) போன்ற மிகச் சிலருடன் சேர்ந்து கொண்டு சமர் புரிந்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில் தான் முகத்தில் கடுமையான வெட்டுக் காயம் ஏற்பட்டது.
நூல் : புகாரி 4064, 3811

பொதுவாக போரின் போது மன்னர்கள் கட்டளை தான் பிறப்பிப்பார்கள். தாங்கள் பாதுகாப்பான இடத்தில் இருந்து கொள்வார்கள். தோல்வி முகம் ஏற்பட்டால் ஓடுவதற்கு ஏற்ற இடத்தில் கூடாரம் அமைத்துக் கொள்வது வழக்கம். ஆனால் மாமன்னராக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தளபதிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதையும், உத்தரவிடும் தளபதியாக மட்டுமல்லாமல் களத்தில் வாளேந்தும் தளபதியாகவும் திகழ்ந்தார்கள் என்பதையும் இந்நிகழ்ச்சிகளிலிருந்து அறிந்து கொள்கிறோம். அவர்களின் வீரத்திற்கு எடுத்துக் காட்டாக இன்னும் பல நிகழ்வுகள் உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகத்தான வீரத்துக்கு ஹுனைன் போர் மிகச் சிறந்த எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.

இந்தப் போரின் போது முஸ்லிம்களின் படை பலம் வலிமையுடைய தாக இருந்தது. இதனால் முஸ்லிம்கள் மிகவும் கர்வம் கொண்டிருந் தார்கள். எதிரிகளை எளிதாக வென்று விடலாம் என்று கணக்குப் போட்டனர். இது பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

பல களங்களில் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். ஹுனைன் (போர்) நாளில் உங்களின் அதிக எண்ணிக்கை உங்களுக்கு மமதையளித்த போது, அது உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்கவில்லை. பூமி விசாலமாக இருந்தும் உங்களுக்கு அது சுருங்கி விட்டது. பின்னர் புறங்காட்டி ஓடினீர்கள். பின்னர் அல்லாஹ் தனது அமைதியைத் தன் தூதர் மீதும், நம்பிக்கை கொண்டோர் மீதும் அருளினான். நீங்கள் பார்க்காத படைகளையும் அவன் இறக்கினான். (தன்னை) மறுத்தோரைத் தண்டித்தான். இது மறுப்போருக்குரிய தண்டனை. பின்னர், தான் நாடியோரை அல்லாஹ் மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். திருக்குர்ஆன் 9:25,26,27

முஸ்லிம்கள் பின் வாங்கி ஓட்டம் பிடித்ததாகவும் பின்னர் இறைவன் தனது வானவர் படையை அனுப்பி எதிரிகளை வெற்றி கொள்ள வைத்ததாகவும் இவ்வசனங்கள் கூறுகின்றன.

ஹவாஸின் எனும் கூட்டத்தினருக்கு எதிராக ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு நடைபெற்ற இப்போரில் பத்தாயிரம் நபித்தோழர்களும் மக்கா வெற்றியின் போது இஸ்லாத்தை ஏற்றவர்களும் இருந்ததாக புகாரி 4333 வது ஹதீஸ் கூறுகிறது.

அப்பாஸ் (ரலி) கூறுகிறார்:

நானும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஹுனைன் போரில் பங்கெடுத்தேன். நானும், அபூ ஸுஃப்யானும் நபிகள் நாயகத்தைப் பிரியாமல் பக்கபலமாக நின்றோம். முஸ்லிம்களும், நிராகரிப்பவர்களும் மோதிக் கொண்டு முஸ்லிம்கள் பின் வாங்கி ஓட்டம் பிடித்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கோவேறுக் கழுதையை நிராகரிப்பவர்களை நோக்கிச் செலுத்தினார்கள். நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கோவேறுக் கழுதையின் கடிவாளத்தைப் பிடித்து அது வேகமாகச் செல்வதைத் தடுத்துக் கொண்டிருந்தேன். அபூ ஸுஃப்யான் சேனத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். 'அப்பாஸே மரத்தடியில் உடன்படிக்கை எடுத்தவர்களை அழைப்பீராக' என்று என்னிடம் கூறினார்கள். நான் உரத்த குரலுக்குரியவனாக இருந்தேன். 'மரத்தடியில் உடன்படிக்கை செய்தோர் எங்கே?' என்று எனது உரத்த குரல் அழைத்தேன். தாய்ப் பசு கன்றை அழைப்பதைப் போல் உணர்ந்த அவர்கள் லப்பைக் (இதோ இருக்கிறோம்) என்று விடையளித்தனர். 'போரிடுங்கள்! அன்ஸாரிகளையும் அழையுங்கள்' என்று கூறினேன், அவர்கள் அன்ஸாரிகளை அழைத்தனர். 'பனுஹாரிஸ் கூட்டத்தாரை அழையுங்கள்' என்றேன்; அவர்களும் பனூஹாரிஸ் கூட்டத்தினரே என அழைத்தனர். பின்னர் தமது கைப்பிடியில் சிறு கற்களை எடுத்து வீசி 'முஹம்மதின் இறைவன் மேல் ஆணையாக தோற்றுப் போயினர்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அதன் பின்னர் எதிரிகள் தோல்வி முகம் கண்டனர்.
நூல் : முஸ்லிம் 3324

சுமார் நூறு நபித்தோழர்களைத் தவிர அனைவரும் ஓட்டம் பிடித்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் துணிவுடன் களத்தில் நின்றார்கள். எந்தத் தலைவரும் தனது படையினரின் பின் பலத்தில் தான் களம் காண்பார். படையினர் ஓட்டம் பிடித்து விட்டால் தலைவர்கள் களத்தில் நிற்க மாட்டார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த இக்கட்டான நேரத்திலும் களத்தை விட்டு ஓடவில்லை.

தமது சகாக்கள் பின் வாங்கி ஓடும் போது கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளை நோக்கி தமது கோவேறுக் கழுதையைத் துணிவாக செலுத்துகிறார்கள்.

எதிரிகள் சுற்றி வளைத்த நேரத்தில் தைரியமாக கழுதையை விட்டும் கீழே இறங்கி இருக்கின்ற வீரர்களை அணிவகுக்கச் செய்கின்றனர். பதட்டப்படவில்லை; நிதானம் இழக்கவில்லை.

ஆன்மீகத் தலைவராகவும், இரக்க குணம் கொண்டவராகவும் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தளபதியாகவும், மாவீரராகவும் இருந்தார்கள் என்பது மேலும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.

பத்ர் போரில் நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வீரம் குறித்து அலீ (ரலி) பின்வருமாறு கூறுகிறார்.

பத்ருப் போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலமே எங்களை நாங்கள் காத்துக் கொண்டோம். அவர்கள் தான் எதிரிகளுக்கு எங்களை விட நெருக்கத்தில் இருந்தனர். அன்றைய தினம் அவர்கள் தாம் கடுமையாகப் போரிட்டனர்.நூல் : அஹ்மத் 619, 991

எதிரிகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத போது அலீ (ரலி) போன்ற மாவீரரே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னே நின்று தம்மைக் காத்துக் கொண்டதாகவும், எதிரிகளுக்கு மிக நெருக்கத்தில் நின்று நபிகள் நாயகம் (ஸல்) போரிட்டதாகவும் கூறுவதே அவர்களின் மாவீரத்தை அறிந்திடப் போதுமானதாகும்.
பிற மத்தவர்களிடம் அன்பு

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மற்றொரு மகத்தான நற்பண்பு பிற மதத்தவர்களிடம் அவர்கள் நடந்து கொண்ட முறை எனலாம்.

பொதுவாக ஒரு மதத்தின் ஆன்மீகத் தலைவர்கள் வேறு மதத்தவர்களை இழிவாகவே கருதுவது வழக்கம். அது போல் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்பவர் ஒரு மதத்தின் மீது ஆழ்ந்த பற்றுடையவராக இருந்தால் அவரும் பிற மதத்தவர்களை இழிவாகவே கருதுவார்.

ஏற்கனவே தமக்குக் கொடுமைகள் புரிந்தவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு ஒருவருக்குக் கிடைக்கும் என்றால் அவர் தமக்குக் கொடுமைகள் இழைத்தவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார். உலக வரலாற்றில் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்து அனைத்து வகையான தீமைகளையும் எதிர்த்ததால் ஏராளமான எதிரிகளை அவர்கள் சம்பாதித்திருந்தனர். அந்த எதிரிகள் மூலம் ஏராளமான கொடுமைகளையும் சந்தித்தனர். பல தோழர்கள் எதிரிகளால் கொன்று குவிக்கப்பட்டனர். ஊரை விட்டே விரட்டியடிக்கப் பட்டனர். இத்தகையோர் மீது ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு சீக்கிரமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது.

அவர்களைப் பழிவாங்கியிருந்தால் அதை யாரும் குறை காண முடியாத அளவுக்கு அதற்கு நியாயங்கள் இருந்தன. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கை முழுமையாக ஓங்கியிருந்த காலகட்டத்திலும் யாரையும் பழிவாங்கவில்லை. முஸ்லிமல்லாத மக்களுடன் நட்புறவுடனேயே அவர்கள் பழகி வந்தனர்.

முஸ்லிமல்லாத மக்களுடன் அவர்கள் நடந்து கொண்ட முறைக்கு ஹுதைபியா உடன்படிக்கையும், அப்போது நடந்த நிகழ்வுகளும் மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றன.

கஃபா ஆலயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரிகளின் கைவசத்தில் இருந்தாலும் அங்கே ஹஜ் கடமையை நிறைவேற்ற யார் வந்தாலும் அவர்கள் தடை செய்யாமல் இருந்தனர். பல நாட்டவர்களும் ஹஜ் காலத்தில் சர்வ சாதாரணமாக வந்து சென்றனர்.

மேலும் உம்ரா எனும் வணக்கம் செய்ய வருவோரையும் மக்கா வாசிகள் தடை செய்வதில்லை. அந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்ற வந்தனர். ஆனால் யாரையும் தடுக்காத அம்மக்கள் நபிகள் நாயகத்தை மட்டும் தடுக்க வந்தனர். அந்தச் சூழ்நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பலப் பிரயோகம் செய்து மக்காவுக்குள் நுழைய முடியும் என்றாலும் எல்லா வகையிலும் விட்டுக் கொடுத்து ஒப்பந்தம் செய்து கொண்டு திரும்பி வந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஃபாவுக்குச் சென்று வணக்கம் செய்யக் கூடாது என்று எதிரிகள் வழிமறித்தனர். நபித்தோழர்கள் பலர் பலப்பிரயோகம் செய்தாவது மக்காவுக்குள் பிரவேசிக்க வேண்டும் என்று கருதினார்கள்.

ஆனால் இந்த ஆண்டு திரும்பிச் சென்று விட்டு அடுத்த ஆண்டு வந்தால் தடுப்பதில்லை எனவும் அது வரை ஒரு வருட ஒப்பந்தம் செய்து கொள்வது என்றும் எதிரிகளுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சமரசம் செய்தனர்.

பல நூறு மைல் தொலைவிலிருந்து பயணம் செய்து வந்தும் காரியம் கை கூடா விட்டால் அதை யாரும் சகித்துக் கொள்ள முடியாது. அதுவும் தமது சொத்து சுகங்களைப் பறித்துக் கொண்டு ஊரை விட்டே விரட்டியடித்தது மட்டுமின்றி தமது சொந்த ஊரில் வழிபாடு நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டது இன்னும் கோபத்தை அதிகப்படுத்தியிருக்க வேண்டும். மேலும், பல போர்களைச் சந்தித்து அனைத்திலும் தோல்வியைச் சந்தித்த கூட்டத்தினர், நபிகள் நாயகத்தை எதிர்த்துப் போரிட இயலாத பலவீனமான நிலைமைக்கு ஆளானோர் தடுக்கும் போது அதைப் பொருட்படுத்தாமல் உள்ளே புகுந்தால் எதுவும் நடந்திருக்காது.

ஆயினும் தமது கை முழுமையாக ஓங்கியிருந்தும் தம்மிடம் நியாயங்கள் இருந்தும் இரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காக இத்தகைய உடன் படிக்கையை மேற்கொள்ளச் சம்மதித்தனர்.

நபித்தோழர்கள் பலரும் இதை விரும்பவில்லை. 'நாம் சரியான மார்க்கத்தில் இருக்கும் போது, தவறான கொள்கை உடையோருக்கு ஏன் பணிய வேண்டும்?' என்று உமர் (ரலி) போன்ற நபித்தோழர்களே மறுப்புத் தெரிவித்தனர். ஆயினும் அதை நபிகள் நாயகம் (ஸல்) ஏற்கவில்லை.

இரத்தம் சிந்துவதைத் தவிர்க்க எதிரிகள் முன் வரும் போது அதை விட அதிகமாக நபிகள் நாயகம் (ஸல்) இறங்கினார்கள்.
ஒப்பந்தம் எழுத ஆரம்பித்ததும் அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்வின் பெயரால்... என்று நபிகள் நாயகம் (ஸல்) எழுதச் செய்தார்கள். அதை உடனே எதிரிகள் மறுத்தனர். அளவற்ற அருளாளன் என்பது எங்களுக்கு அன்னியமானது; அல்லாஹ்வின் பெயரால் என்று மட்டுமே எழுத வேண்டும் என்று அடம் பிடித்தனர். அதை நபிகள் நாயகம் (ஸல்) ஏற்றுக் கொண்டனர்.

அப்துல்லாவின் மகனும் அல்லாஹ்வின் தூதருமாகிய முஹம்மதும்... என்று ஒப்பந்த வாசகத்தை எழுதிய போதும் எதிரிகள் ஆட்சேபித்தனர். 'அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது என்று தான் குறிப்பிட வேண்டும்; அல்லாஹ்வின் தூதர் என்று குறிப்பிடக் கூடாது. நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதை நாங்கள் ஒப்புக் கொண்டிருந்தால் நமக்கிடையே ஒப்பந்தம் தேவையில்லேயே' என்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நான் அல்லாஹ்வின் தூதர் தான்; ஆனாலும் ஒப்பந்தத்தில் அதை அழித்து விடுகிறேன்' எனக் கூறி அலீ (ரலி) யிடம் அதை அழிக்கச் சொன்னார்கள். 'நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் நம்புவதால் அதை அழிக்க மாட்டேன்' என்று அலீ (ரலி) மறுத்து விட்டார். அந்த இடம் எதுவென அறிந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்அதைத் தமது கையால் அழித்தனர்.

'எங்கள் ஊரைச் சேர்ந்தவர் இஸ்லாத்தை ஏற்று உங்களிடம் வந்தால், எங்களிடம் அவரைத் திருப்பி அனுப்பிட வேண்டும்' என்று எதிரிகள் நிபந்தனை போட்டனர். நபித் தோழர்கள் இதை அறவே விரும்பாத போதும் நபிகள் நாயகம் (ஸல்) இதையும் ஏற்றனர்.

இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போதே அபூஜந்தல் என்பார் இஸ்லாத்தை ஏற்று நபிகள் நாயகத்திடம் ஓடி வந்தார். அவரைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு எதிரிகள் கேட்டனர். இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லையே என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை எதிரிகள் ஏற்கவில்லை. இதிலும் விட்டுக் கொடுத்து அபூஜந்தலை அவர்களிடம் அனுப்பினார்கள்.

இப்படி எல்லா வகையிலும் விட்டுக் கொடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எல்லா நிலையிலும் சமாதானத்தையே விரும்பினார்கள் என்பதும் தமக்குக் கொடுமைகள் புரிந்த எதிரிகளை ஒழிக்க தக்க சந்தர்ப்பம் கிடைத்தும் விட்டுக் கொடுத்தார்கள் என்பதும் இந்த மாமனிதரின் மதம் கடந்த மனித நேயத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது.
நூல் : புகாரி 2731, 2732

இஸ்லாமிய மார்க்கத்தில் ஸகாத் எனும் தர்மம் கட்டாயக் கடமை என்பதை முஸ்லிமல்லாத மக்களும் அறிவார்கள். செல்வந்தர்களிடம் திரட்டப்படும் இந்த நிதி எட்டு விதமான பணிகளுக்குச் செலவிடப்பட வேண்டும். முஸ்லிம் அல்லாதவர்களுடன் நல்ணக்கம் வளர்வதற்காக அவர்களுக்காக வழங்குவதும் அப்பணிகளில் ஒன்று என இஸ்லாம் கூறுகிறது. (பார்க்க திருக்குர்ஆன் 9:60)

முஸ்லிமல்லாத மக்களுக்குப் பொருளாதார உதவிகள் செய்வதை இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக நபிகள் நாயகம் (ஸல்) ஆக்கினார்கள்.

உலகத்தில் எந்த மதத்திலும் பிற மதத்தினருக்கு உதவுவது மார்க்கத்தில் கட்டாயக் கடமையாக ஆக்கப்பட்டதில்லை. எந்த மதத்திலும் இத்தகைய ஒரு சட்டத்தைக் காணவே முடியாது. சில தனிப்பட்ட நபர்கள் மதம் கடந்து மனித நேயத்துடன் நடந்து கொள்வார்கள். இத்தகையோர் குறைந்த எண்ணிக்கையில் எல்லா மதங்களிலும் இருப்பார்கள். இது அந்தத் தனிப்பட்ட நபர்களின் பெருந்தன்மையினால் ஏற்படும் விளைவு தானே தவிர அவர்கள் பின்பற்றும் மதத்தில் கடமையாக்கப்பட்டதால் அல்ல. ஆனால் நபிகள் நாயகமோ இவ்வாறு பிற சமய மக்களுக்கு வழங்குவதை இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றாக ஆக்கினார்கள்.

முஸ்லிமல்லாதவர்களுக்கு இவ்வாறு முஸ்லிம் அரசின் கருவூலத்திருந்து கண்துடைப்பாக, அற்பமாக வழங்குவதா என்றால் நிச்சயம் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்!

'இஸ்லாத்தின் பெயரால் எங்களுக்கு உதவுங்கள்' என்று இஸ்லாத்தின் பெயரைச் சொல் யார் கேட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்குக் கொடுக்காமல் இருக்க மாட்டார்கள். ஒரு மனிதர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தின் பெயரால் உதவி கேட்டார். இரு மலைகளுக்கிடையே அடங்கும் அளவுக்கு அவருக்கு ஆடுகளை வழங்கினார்கள். அவர் தனது சமுதாயத்திடம் சென்று 'என் சமுதாயமே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்! ஏனெனில் நிதி நெருக்கடியைப் பற்றி அஞ்சாமல் முஹம்மத் வாரி வழங்குகிறார்' எனக் கூறினார்.
நூல் : முஸ்லிம் 4627

'இரு மலைகளுக்கிடையே அடங்கும் அளவுக்கு ஆடுகள்' என்ற சொற்றொடர் மிக அதிகமாக வழங்கும் போது கூறப்படும் சொல் வழக்காகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிமல்லாத மக்களுக்கு அளவுக்கதிகமாக வாரி வழங்குவது எந்த அளவுக்கு இருந்தது என்றால் இதற்காகவே பலரும் இஸ்லாத்தை நோக்கி தங்கள் கவனத்தைத் திருப்பும் அளவுக்கு இருந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வளவு வழங்கும் போது பலவீனமாகவோ, முஸ்லிமல்லாத மக்களின் தயவு தேவை என்ற நிலையிலோ இருக்கவில்லை. மாறாக முஸ்லிம்களே பெரும்பான்மையாக இருந்தார்கள். நபிகள் நாயகத்திடம் தான் ஆட்சியும் இருந்தது. முஸ்லிமல்லாத மக்களால் இடையூறுகள் ஏதும் ஏற்படும் என்று அஞ்சி அதைத் தவிர்ப்பதற்காக வழங்கவில்லை. மேலும் அனைத்து மதத்தவர்களிடமும் வசூக்கப்படும் வரியிருந்தும் இவ்வாறு வழங்கவில்லை. மாறாக முஸ்லிம்களிடம் வசூலிக்கப்படும் ஸகாத் நிதியிலிருந்து தான் முஸ்லிமல்லாத மக்களுக்கு வாரி வழங்கினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மதம் கடந்த மனித நேயத்திற்குச் சான்றாக அமைந்த மற்றொரு நிகழ்ச்சியைக் காணுங்கள்!

அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) என்ற நபித்தோழரின் வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்டது. அவர் வீட்டுக்கு வந்தவுடன் 'நமது அண்டை வீட்டில் உள்ள யூதருக்குக் கொடுத்தீர்களா? நமது அண்டை வீட்டில் உள்ள யூதருக்குக் கொடுத்தீர்களா?' என்று கேட்டார்கள். 'அண்டை வீட்டாரை எனது வாரிசாக அறிவித்து விடுவாரோ என்று நான் எண்ணும் அளவுக்கு ஜிப்ரீல் எனும் வானவர் எனக்கு வலியுறுத்திக் கொண்டே இருந்தார்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகவும் அப்போது தெரிவித்தார்.
நூல் : திர்மிதி 1866

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெருங்கிய தோழர்களில் அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)யும் ஒருவர். அவர் தமது அண்டை வீட்டு யூதருக்கும் தமது வீட்டில் அறுக்கப்பட்ட ஆட்டிறைச்சியை வழங்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார். இதற்கு நபிகள் நாயகம் ஸல்) அவர்களின் போதனையையே அவர் காரணமாகக் காட்டுகிறார்.

அண்டை வீட்டாருடன் நல்லுறவைப் பேணுமாறு வலியுறுத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதத்தின் அடிப்படையில் அண்டை வீட்டாருக்கு உதவுவதில் பாரபட்சம் காட்டக் கூடாது என்று விளக்கமளித்ததால் தான் அவர்களிடம் பாடம் கற்ற நபித்தோழரால் இவ்வாறு நடந்து கொள்ள முடிகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மிடம் ஆட்சியும், அதிகாரமும் வந்த பின்பும் முஸ்லிமல்லாத மக்களிடம் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதற்கு மற்றொரு சான்றையும் பாருங்கள்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் யூத மதத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் பணி செய்து வந்தார். அவர் ஒரு நாள் நோய்வாய்ப்பட்டார். உடனே அவரை விசாரிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றனர். அவரது தலைக்கருகில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அமர்ந்தார்கள். 'இஸ்லாத்தை நீ ஏற்றுக் கொள்ளலாமே' என்று அவரிடம் கூறினார்கள். அப்போது அந்த இளைஞரின் தந்தையும் அருகில் இருந்தார். அந்த இளைஞர் தமது தந்தையைப் பார்த்தார். 'நபிகள் நாயகம் கூறுவதைக் கேள்' என்று தந்தை கூறியதும் அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். 'இவரை நரகத்திருந்து காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்' என்று கூறிக் கொண்டே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியேறினார்கள்.
நூல் : புகாரி 1356

இந்த நிகழ்ச்சியில் பல விஷயங்களை நாம் அறிந்து கொள்கிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் வாழ்ந்த யூதர்கள் பலவகையிலும் நபிகள் நாயகத்துக்கு இடையூறு செய்து வந்தனர். எதிரி நாட்டவருக்குத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டவர்களும் அவர்களில் இருந்தனர். இரட்டை வேடம் போட்டு முஸ்லிம்களாக நடித்து ஏமாற்றியவர்களும் இருந்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருவதற்கு முன் யூதர்கள் தான் பெரும்பான்மையாக இருந்தனர். அவர்களில் பலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால் எஞ்சியவர்களுக்கு நபிகள் நாயகத்தின் மீது கடுமையான கோபம் இருந்தது.

இத்தகைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பணியாளராகச் சேர்த்துக் கொண்டார்கள். ஒரு சமுதாயத்தினர் எதிரிகளாக உள்ளதால் அச்சமுதாயத்தில் உள்ள நல்லவர்களைப் பகைத்துக் கொள்ளத் தேவையில்லை என்ற அளவுக்கு அவர்களிடம் மனித நேயம் மிகைத்திருந்தது. இதனால் தான் எதிரிகளின் சமுதாயத்தைச் சேர்ந்தவரைத் தமது ஊழியர்களில் ஒருவராக அவர்களால் சேர்த்துக் கொள்ள முடிந்தது.

அவ்வாறு ஊழியராக இருப்பதால் அவரது பலவீனமான நிலையைப் பயன்படுத்தி இஸ்லாத்தில் சேருமாறு அவர்கள் வலியுறுத்தவில்லை. மாறாக அவர் மரணத்தை நெருங்கிய போது 'அந்த நிலையில் அவர் மரணித்தால் அவர் நரகம் சென்று விடக் கூடாதே' என்பதற்காக கடைசி நேரத்தில் அவரை இஸ்லாத்திற்கு அழைக்கிறார்கள். அதையும் ஒளிவு மறைவாகச் செய்யாமல், அவரது தந்தைக்கு அருகில் வைத்துக் கொண்டே கூறுகிறார்கள். அவர் இஸ்லாத்தை ஏற்றதும் நரகிருந்து அவரைக் காப்பாற்றிய இறைவனுக்கே நன்றி என்று கூறுகிறார்கள்.

இறக்கும் தறுவாயில் உள்ள ஒருவர் இஸ்லாத்தை ஏற்பதால் முஸ்லிம்களுக்கு எந்தப் பலமும் அதிகரிக்கப் போவதில்லை. எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்வதை விட மக்கள் நரகத்திற்குச் சென்று விடக் கூடாது என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒரே நோக்கமாக இருந்தது என்பதையும் இதிலிருந்து அறியலாம்.

மேலும் இவ்வாறு அந்த இளைஞரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய போது, அருகில் இருந்த தந்தை அதை ஏற்கச் செய்கிறார் என்றால் அந்த மக்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த அளவு மனித நேயத்துடனும், மனிதாபிமானத்துடனும் நடந்திருப்பார்கள் என்பதை ஊகம் செய்யலாம்.

இத்தகைய பண்பாடுகளாலும், எல்லையற்ற மனித நேயத்தினாலும் தான் மனிதர்களை அவர்கள் வென்றெடுத்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நஜ்து எனும் பகுதிக்கு சிறு படையை அனுப்பினார்கள். அப்படையினர் பனூ ஹனீபா சமுதாயத்தைச் சேர்ந்த ஸுமாமா என்பவரைப் பிடித்து வந்தனர் அவரைப் பள்ளிவாசன் ஒரு தூணில் கட்டி வைத்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து 'ஸுமாமாவே! உம்மிடம் என்ன இருக்கிறது?' என்று கேட்டனர். அதற்கவர் 'முஹம்மதே! என்னிடம் செல்வம் இருக்கிறது. என்னை நீங்கள் கொன்றால் கொல்லப்படுவதற்குத் தகுதியானவனையே நீங்கள் கொன்றவராவீர்கள். நீங்கள் அருள் புரிந்தால் நன்றியுடன் நடப்பவனுக்கு அருள் புரிந்தவராவீர்கள்' என்று கூறினார். அவரை அப்படியே விட்டு விட்டு நபிகள் நாயகம் (ஸல்) சென்று விட்டனர். மறு நாள் அவரிடம் வந்து முதல் நாள் கேட்டது போல கேட்டனர். அவரும் முதல் நாள் கூறிய பதிலையே கூறினார். மூன்றாம் நாளும் அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தனர். முதல் நாள் கேட்டது போலவே அவரிடம் கேட்டனர். அவரும் முதல் நாள் கூறிய பதிலையே கூறினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஸுமாமாவை அவிழ்த்து விடுங்கள்' என்றார்கள். அவர் பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள பேரீச்சை மரத் தோப்புக்குள் சென்று குளித்து விட்டு பள்ளிவாசலுக்குள் நுழைந்தார். 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை. முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார் என்று நான் உறுதி கூறுகிறேன். முஹம்மதே! இவ்வுலகில் உங்கள் முகத்தை விட எனக்கு வெறுப்பான முகம் ஏதும் இருந்ததில்லை. இன்று உலகிலேயே எனக்கு மிகவும் பிடித்த முகமாக உங்கள் முகம் மாறி விட்டது. உங்கள் மாக்கத்தை விட எனக்கு வெறுப்பான மார்க்கம் ஏதுமிருக்கவில்லை. இன்று உங்கள் மார்க்கம் உலகிலேயே எனக்குப் பிடித்த மார்க்கமாக ஆகி விட்டது. உங்கள் ஊரை விட எனக்கு வெறுப்பான ஊர் எதுவும் இருந்ததில்லை. இன்றோ உலகிலேயே எனக்குப் பிடித்த ஊராக உங்கள் ஊர் மாறி விட்டது. உங்கள் படையினர் என்னைப் பிடித்து வந்து விட்டனர். நான் மக்கா சென்று உம்ரா நிறைவேற்ற நினைக்கிறேன். நீங்கள் என்ன கூறுகிறீர்கள்' என்று கேட்டார். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்த்துக் கூறி உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றச் சொன்னார்கள். அவர் மக்காவுக்கு வந்ததும் 'நீரும் மதம் மாறி விட்டீரா?' என்று மக்கா வாசிகள் கேட்டனர். 'இல்லை; முஹம்மது அவர்களுடன் சேர்ந்து நானும் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் அனுமதியின்றி யமாமா'விலிருந்து ஒரே ஒரு கோதுமை கூட உங்களுக்கு இனிமேல் வராது' என்று விடையளித்தார்.
நூல் : புகாரி 4372

யமாமா எனும் பகுதியில் அதிகாரம் செலுத்துபவராக ஸுமாமா இருந்தார். சிற்றரசராக இருந்த அவரைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் படையினர் பிடித்து வந்தனர். ஏன் பிடித்து வந்தனர் என்ற காரணத்தை இந்த நிகழ்ச்சியில் ஸுமாமாவின் வாக்கு மூலத்திருந்தே நாம் அறிந்து கொள்ளலாம். என்னை நீங்கள் கொல்வதென முடிவு செய்தால் அதற்கு நான் தகுதியானவனே என்று அவர் கூறினார்.

கொல்லப்படுவதற்குத் தகுதியான பல கொடுமைகளை முஸ்லிம்களுக்கு எதிராக அவர் நிகழ்த்தியவர் என்பது இதிலிருந்து தெரிகிறது. முஸ்லிம்களுக்கு எதிராக அவர் செய்த கொடுமைகள் காரணமாகவே அவருக்கு எதிராகப் படையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள்.

பொதுவாக இது போன்ற கொடுமை செய்த தலைவர்களும், சிற்றரசர்களும் மன்னிக்கப்படுவது அன்றைய வழக்கத்தில் இருந்ததில்லை. மன்னித்து விடுவதால் மேலும் பலத்தைப் பெருக்கிக் கொண்டு போருக்கு வருவார்கள் என்பதால் இவ்வாறு செய்வது அன்று வழக்கத்தில் இல்லை.

'என்னைக் கொல்லவும் நியாயம் இருக்கிறது; மன்னித்தால் நான் நன்றியுடையவனாக இருப்பேன்' என்று அவர் கோருகிறார். அதுவும் வேண்டிய அளவுக்குப் பணத்தைப் பெற்றுக் கொண்டு விடுதலை செய்தால் போதும் என்பது தான் அவரது கோரிக்கை.

கொல்லப்படுவதற்குரிய அத்தனை நியாயங்கள் இருந்தும், அதுவே அன்றைய உலகில் வழக்கமாக இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைக் கொல்லவில்லை. மூன்று நாட்களாக அவரை விடுவிக்கவும் இல்லை. எடுத்த எடுப்பிலேயே முதல் நாளிலேயே அவரை அவர்கள் விடுவித்திருக்க முடியும்.

ஆயினும் முஸ்லிம்களின் கொள்கை, கோட்பாடுகள், வணக்க வழிபாடுகள், அவர்களின் பண்பாடுகள் அனைத்தையும் அவர் காண வேண்டு மென்பதற்காகவே மூன்று நாட்கள் அவரைப் பள்ளிவாசலேயே கைதியாக வைத்தார்கள்.

மூன்றாம் நாளில் அவரிடம் எந்தப் பணத்தையும் கேட்காமலும், எந்த நிபந்தனையும் விதிக்காமலும், எந்த ஒப்பந்தமும் எழுதிக் கொள்ளாமலும், எந்தப் பேச்சு வார்த்தையும் நடத்தாமலும் அவிழ்த்துவிடச் சொல்கிறார்கள்.

உண்மை முஸ்லிம்களின் நடவடிக்கைகளையும், அவர்களின் கொள்கைகளையும், அவர்களின் அப்பழுக்கற்ற நேர்மையையும் நேரில் காண்பவர் நிச்சயம் எதிரியாக மாட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) நம்பியதால் தான் பயங்கரமான எதிரியைச் சர்வ சாதாரணமாக அவிழ்த்து விட்டார்கள்.

அவர்கள் எதிர் பார்த்தது போலவே அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார். அவர் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் நஞ்சென வெறுக்கும் நிலையில் தான் தூணில் கட்டப்பட்டார். மூன்றே நாட்களில் அவரது உள்ளம் தலைகீழ் மாற்றம் அடைந்தது. உலகிலேயே நபிகள் நாயகம் (ஸல்) தனது அதிக அன்புக்குரியவராக மாறியதாகக் கூறுகிறார்.

முஸ்லிமல்லாத எதிரிகளிடம் கூட நபிகள் நாயகம் (ஸல்) எந்த அளவு கருணை உள்ளத்துடன் நடந்து கொண்டார்கள் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்கிறோம். நன்றி : www.onlinepj.com

0 comments:

Post a Comment