எழுதியவர்: சகோதரர் மௌலவி. பி.ஜெயினுல் ஆபிதீன் அவர்கள்.
சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகள், ஆட்சித் தலைவர்கள், பயனுள்ள பல கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்கியவர்கள், மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர்கள், மாவீரர்கள், வாரி வழங்கிய வள்ளல்கள், பண்டிதர்கள் மற்றும் மதங்களைத் தோற்றுவித்தோர் என பல்லாயிரக்கணக்கான சாதனையாளர்கள் உலகில் தோன்றி மறைந்துள்ளனர்.
இத்தகைய சாதனையாளர்களிலிருந்து முக்கியமான இடத்தைப் பிடித்த நூறு சாதனையாளர்களைத் தேர்வு செய்து The 100' என்ற நூலை மைக்கேல் ஹார்ட் எனும் வரலாற்று ஆய்வாளர் எழுதினார். இது 'நூறு பேர்' என்ற பெயரில் தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது.மனித குலத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை அவர் வரிசைப்படுத்தும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முதல் இடத்தை அளித்தார். முதல் சாதனையாளராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அந்த நூல் அவர் குறிப்பிடுகிறார்.
மைக்கேல் ஹார்ட் கிறித்தவ மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவராக இருந்தும் கூட 'மக்களிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்றால் முதடம் நபிகள் நாயகத்துக்குத் தான்' என்று குறிப்பிடுகிறார்.
வரலாற்று நாயகர்கள் குறித்து நடுநிலையோடும், காய்தல் உவத்தலின்றியும் யார் ஆய்வு செய்தாலும், எந்தக் கோணத்தில் ஆய்வு செய்தாலும் அவரால் நபிகள் நாயகத்துக்குத் தான் முதலிடத்தைத் தர முடியும்.பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்த ஒரு மனிதர் அன்று கூறிய, நடைமுறைப்படுத்திக் காட்டிய அனைத்தையும் அப்படியே பின்பற்றும் ஒரு சமுதாயம் உலகில் இருக்கிறது என்றால் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயம் மட்டும் தான்.
வணக்க வழிபாடுகள் மட்டுமின்றி கொடுக்கல் வாங்கல், குடும்ப வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை என எந்தப் பிரச்சினையானாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டவாறு நடக்கக் கூடிய சமுதாயம் பதினான்கு நூற்றாண்டுகளாக உலகில் இருந்து வருகிறது.'அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் வழிகாட்டி' என்று உலகில் கால் பகுதிக்கும் அதிகமான மக்கள் நம்புகின்றார்கள்.
இத்தகையோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் காட்சியையும் உலகம் காண்கிறது.உலகில் எந்தத் தலைவருக்கும் இந்தச் சிறப்புத் தகுதி கிடைத்ததில்லை என்பதை யாராக இருந்தாலும் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.மனைவி, மக்கள், பெற்றோர், உற்றார் மற்றும் அனைவரையும் விட, ஏன் தம் உயிரையும் விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அதிகம் நேசிக்கக் கூடிய பல கோடிப் பேர் இன்றும் வாழ்கிறார்கள்.
உலக மக்களால் காட்டுமிராண்டிகள் வாழும் பூமியாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பாலைவனத்தில் பிறந்த ஒருவரால் இவ்வளவு உயர்ந்த நிலையை அடைய முடிந்தது எப்படி?இக்கேள்விக்கான விடை தான் இந்நூல்..நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கை வரலாற்று நூலாக இது இருக்குமோ என்று யாரும் கருதிவிட வேண்டாம்.இது வரலாற்று நூல் அல்ல.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய ஆன்மீகப் பாதையை விளக்கும் நூலும் அல்ல. இஸ்லாம் மார்க்கத்தின் கொள்கை கோட்பாடுகளையோ, அதன் சட்டதிட்டங்களையோ விளக்குவதற்காகவும் இந்நூல் எழுதப்படவில்லை.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிகழ்த்திக் காட்டிய அற்புதங்களைப் பட்டியட்டு பிரமிப்பை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமன்று.
மாறாக 1400 ஆண்டுகளுக்கு முன் உலகில் பிறந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏனைய தலைவர்களிடமிருந்து எப்படி தனித்து விளங்கினார்கள்?'நபிகள் நாயகம் (ஸல்) போன்ற ஒரு மனிதரை உலகம் கண்டதில்லை' என்று எண்ணற்ற முஸ்லிம் அல்லாத தலைவர்களும், சிந்தனையாளர்களும், வரலாற்றாசிரியர்களும் ஏற்றிப் போற்றுவது ஏன்?
நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் அவர்களை இன்றளவும் அப்படியே பின்பற்றுவது ஏன்? என்பன போன்ற கேள்விகளுக்கான விடையே இந்நூல். முஸ்லிமல்லாத நண்பர்கள் நபிகள் நாயகத்தைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பினால் அவர்களது சிறப்பையும், தகுதிகளையும் நிச்சயம் அறிந்து கொள்ள இந்நூல் உதவும்.
முஸ்லிம்களுக்குக் கூட நபிகள் நாயகம் (ஸல்) குறித்து அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள் இதில் உள்ளன.
ஆதாரம்
http://onlinepj.com/books/mamanithar/
http://iniyamaarkam.blogspot.com
சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்.(அல்குர்ஆன்.17:81)
0 comments:
Post a Comment