மனிதர்களுள் யாருக்கு நான் அதிகக் கடன்பட்டுள்ளேன்?' இது நபித்தோழர் ஒருவரின் வினா. 'தாய்' என்று பதிலளித்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். 'அடுத்து யார்?' என மீண்டும் அவர் கேட்க, 'தாய்' என்றே கூறினார்கள். மூன்றாவது முறையாக 'அடுத்து யார்?' என்று கேட்டபோதும் 'தாய்' என்றே பதில் வந்தது. 'அடுத்து யார்?' என நான்காம் முறையாக அவர் கேட்க 'தந்தை' என்று பதிலளித்தார்கள் நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் - புகாரீ
ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு தாய்-தந்தை இருவருமே காரணம் என்பது உண்மையானாலும் தந்தையை விட தாய்க்கே முதலிடம் வழங்குகிறது இஸ்லாம். காரணம் என்ன? திருக்குர்ஆன் கூறுகிறது:
அவனுடைய அன்னை, அவனைச் சிரமத்துடனேயே கருவுற்று சுமந்திருந்தாள். சிரமப்பட்டுத் தான் அவனைப் பெற்றெடுத்தாள். மேலும், அவனைச் சுமந்திருப்பதற்கும் பால்குடிப்பை மறக்கடிப்பதற்கும் முப்பது மாதங்கள் ஆகின்றன.' ( அல் குர்ஆன் 46:15).
தியாகத்திற்கு தாயைவிட வேறு சிறந்த உதாரணம் சொல்வது சிரமம். அவள் ஒரு குழந்தையின் பிறப்புக்காக இறப்பின் வாசல்வரை சென்று வருகிறாள; ஒரு தாய் தனக்கு என்னவாவெல்லாம் இருக்கிறாள் என்பதை மனிதன் கடைசிவரை உணர்வதில்லை. அவன் அதை உணரும் போது அவள் உயிரோடு இருப்பதில்லை'. சிலரது வாழ்வில் இது உண்மையுங்கூட!
ஒரு பெண் தன் இரு பெண் மக்களுடன் ஆயிஷா (ரழி) அவர்களிடம் வந்து யாசகம் கேட்டு நின்றாள். அவளிடம் மூன்று பேரித்தங்கனிகளை ஆயிஷா (ரழி) கொடுக்கின்றார்கள். அவற்றில் ஒன்றை தனக்கு வைத்துக்கொண்டு மற்ற இரண்டையும் தன் மகள்களுக்கு சாப்பிடக் கொடுக்கிறாள். அவற்றை அவர்கள் சாப்பிடுகின்றனர். தனக்குரியதை சாப்பிட அந்த பெண் எத்தனித்த போது அதையும் தங்களுக்குத் தரக்கேட்டு அந்தக் குழந்தைகள் அடம்பிடிக்கின்றன. எவ்வித முகச்சுழிப்புமின்றி சந்தோஷமாக அப்பழத்தை இரண்டாகப் பிளந்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்துவிட்டு அவர்கள் சாப்பிடுவதை ரசித்துக் கொண்டிருந்தாள். இந்த நிகழ்ச்சி ஆயிஷா (ரழி) வின் மனதைப் பெரிதும் பாதித்தது. இரவில் வீடு திரும்பிய நபிகள்நாயகம் (ஸல்) அவர்களிடம் இந்த நிகழ்வைக்கூற, மெய்சிலிர்த்துப் போன நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் 'அவள் நேரடியாக சுவனம் செல்வாள்' என்ற சுபச்செய்தியை தெரிவிக்கிறார்கள். முஸ்லிம்
தாய் - தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ இருவருமோ முதுமை அடைந்துவிட்ட நிலையில் உம்மிடம் இருந்தால் அவர்களை 'சீ' என்றுகூடக் கூராதீர். மேலும் அவர்களைக் கடிந்து பேசாதீர். மாறாக அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீராக (திருக்குர்ஆன் 17:23).
முதுமைப் பருவத்தில் பெற்றோர் நம் மனம் புண்படும் விதத்தில் நம்மைப் பேசிடலாம்,. ஆனாலும்கூட அதற்குப் பகரமாக நாம் பேசிடும் ஒவ்வொரு வார்த்தையிலும் கண்ணியம் இழையோட வேண்டும். பெற்றோரின் மறியாதையைக் குதறிவிடக்கூடாது. 'பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்று' என நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்கிறார்கள்.
நீ நேரடியாகத் திட்டுவது ஒருபுறம் இருக்கட்டும், நீ ஒருவனின் தந்தையைத் திட்ட அவன் பதிலுக்கு உன் தந்தையைத் திட்டக்கூடிய சூழலைக்கூட உருவாக்கி விடாதே என்று உணர்த்துகிறார்கள். முஸ்லிம்
உணவளிப்பது: நடைமுறை வாழ்வில் பெற்றோருக்கு உணவூட்டிப் பராமரிக்கும் விஷயத்தில்கூட கஞ்சத்தனம் செய்யப்படுகிறது. பெற்றோர் வசதியாக இருந்து பூர்வீகச் சொத்துகளில் கொஞ்சம் கூடுதலாகக் கிடைத்தால் உணவு, வசதி எல்லாவற்றிலும் அவர்களுக்கு சகல மரியாதையும் கிடைக்கிறது. இல்லையெனில் சாதாரண அளவுக்குக்கூட இருக்காது. சிலர் திருமணத்திற்கு முன் பெற்றோருக்கு நன்கு உபகாரம் புரிவார்கள். ஆனால் மனைவியின் வருகைக்குப் பிறகு மாற்றங்கள் ஏற்படும்.தலையணைமந்திரம் என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. உடலால் தளர்ச்சியடைந்துவிட்ட பெற்றோரை மனைவியின் சொல்கேட்டு மனத்தளவிலும் தளர்ச்சியடைய வைப்பவன் மனிதாபமுள்ள மகனாக இருக்க முடியாது.
குழந்தைப் பருவத்தில் உங்கள் பெற்றோருக்கு நீங்கள் உபகாரம் புரிந்தால் முதுமைப் பருவத்தில் உங்களுடைய குழந்கைள் உங்களுக்கு உபகாரம் புரிவார்கள். ஹாகிம்
இதை இப்படியும் சொல்லலாம். தம்முடைய பெற்றோரை அவமதிக்கும் ஒவ்வொருவரும் அவர்தம் பிள்ளைகளால் பிற்காலத்தில் அவமதிக்கப்படுவது நிச்சயம்.
ஒவ்வொரு குற்றத்திற்கான தண்டனையும் மறுமையில் வழங்கப்படுவதுதான் இறைவிதி. ஆனால் பெற்றோருக்கு நோவினை செய்தவன் அதற்கான பிரதிபலனை இவ்வுலகிலேயே கண்கூடாகக் கண்டபின்பே இறப்பான். (நவூதுபில்லாஹ்). நபிகள்நாயகம் (ஸல்). பைஹகி
ஒரு நபித்தோழர் நபிகள்நாயகம் (ஸல்) அவர்களின் அவைக்கு வந்து, நான் இஸ்லாத்திற்காக நாடுதுறந்து செல்லத் தங்களிடம் உறுதிமொழி எடுத்திட வந்துள்ளேன்.என் தாய், இதற்கு அனுமதியளிக்காத நிலையில் அவரை அழ வைத்துவிட்டு இங்கே புறப்பட்டு வந்துள்ளேன்.' எனக் கூறினார். உடனே ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மொழிந்த வார்த்தை என்ன தெரியுமா? 'உடனே இங்கிருந்து புறப்பட்டு அழுதுகொண்டிருக்கும் உனது தயைச் சிரிக்க வைத்துவிட்டு பிறகு வந்து என்னைப்பார்.'அபூதாவூது
நம்மில் சிலர் பெற்றோரை அழ வைத்துவிட்டு தொழுது அல்லாஹ்வை சந்தோஷப்படுத்திடலாம் என்கிற எண்ணத்தில் இருக்கலாம். அவர்களுக்கான நபிமொழி செய்தி இது: 'அல்லாஹ்வின்; பொருத்தம் பெற்றோரின் பொருத்தத்தில் இருக்கிறது. அல்லாஹ்வின் கோபம் பெற்றோரின் கோபத்தில் இருக்கிறது.
ஹள்ரத் அஸ்மா பின்த் அபூபக்கர் (ரழி) என்கின்ற பெண்மணியின் தாயார் முஸ்லிமாகாத நிலையில் அல்லாஹ்வுக்கு இணை வைப்பவராக இருந்து கொண்டு தம் மகளை தேடி வந்த போது 'யா ரசூலுல்லாஹ், என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார், நான் அவருடன் உறவாடலாமா?' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'ஆம்! நீ உன் தாயை பேணி இரக்கத்தோடு நடந்து கொள்,' என்றார்கள். புகாரி
முஸ்லிமாகாமல் இணை வைக்கிற பெரும் பாவத்தைச் செய்து வருகிற தாயே ஆனாலும், அவரைப் பேணி வருவது கட்டாயம் என்றால், ஒரு தாய் ராட்சசியாக இருக்கிறார் என்பதற்காக அவரை மதிக்காமல் இருக்க இஸ்லாம் அனுமதிக்குமா என்ன? ராட்சசியாக இருந்தாலும் அவரையும் இரக்கத்தோடு அணுகுவதே இஸ்லாத்தின் ஆணை.
தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது'' என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்பதை மறந்து விட வேண்டாம். நாம் அணைவரும் பெற்றோரைப் பேணக்கூடியவர்களாகத் திகழ எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக, ஆமீன்.
சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்.(அல்குர்ஆன்.17:81)
0 comments:
Post a Comment