தூய்மையான இஸ்லாத்தில் மார்க்கம் என்ற பெயரிலே பல போலி மார்க்க அறிஞர்கள் இணைவைப்பையும் புரோகிதத்தையும் புகுத்தினர். அதை இன்றும் சுன்னத்தை பின்பற்றுகிறோம் என்று போலி கூச்சல் போடுபவர்கள் நியாயப் படுத்தியே வருகின்றனர். அல்லாஹ்வும் அவனது தூதரும் மார்க்கத்தை தெளிவாக எத்தி வைத்துவிட்ட நிலையில் இவர்கள் எந்த இலாபத்திற்காக மார்க்கத்தை வளைக்கின்றனர் என்று தெரியவில்லை. மேலும் இவர்கள் போன்றவர்கள் அல்லாஹ்வின் திருப்தியை விட வேற ஏதோ ஒன்றின் மீது அதிக நாட்டம் கொண்டுள்ளனரோ என்ற சந்தேகம் வருகிறது.
இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள் பற்றி அல்குர்-ஆனிலும் ஹதீஸ்களிலும் பல இடங்களில் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் இஸ்லாமிய சமுதாயத்தில் அத்தகைய தீமைகள் சர்வ சாதாரணமாக மலிந்து கிடப்பதை காணலாம். இன்று பெரும்பாலான மனிதர்கள் சிறிது வசதி வந்தவுடனேயே கர்வத்துடனும் மார்க்கத்தின் செயல்பாடுகளில் அலட்சியத்துடனும் தங்களை ஏதோ வானத்தில் இருந்து குதித்ததுபோல் காட்டிக் கொள்கின்றனர். இவர்கள் ஏதோ ஆயிரம் வருடங்கள் இந்த உலகத்தில் வாழப் போவது போலவும் தங்களிடம் இருக்கும் இந்த செல்வம் நிலையாக இருக்கும் என்றும் ஒருவித மயக்கத்தில் வாழ்ந்து வருகின்றனர். அத்தகைய சிந்தனை உடைய முஸ்லிம்கள் தாங்கள் நிலையை மாற்றி நிலையில்லாத இந்த உலக வாழ்கையை விட நிலையான மறுமை வாழ்கையே சிறந்தது என்பதை தங்களுடைய மனதில் நிறுத்த வேண்டும். மேலும் இஸ்லாத்தின் போதனைகளை மற்றவர்களிடம் பரப்ப தங்களால் ஆன முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
1) ஷிர்க் எனும் இணைவைத்தல்!
“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்” (அல்-குர்ஆன் 4:48)
2) சூன்யம், ஜோதிடம் மற்றும் குறிபார்த்தல்!
“யாராவது குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பியவர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதை நிராகரித்தவர் ஆவார்” அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் அபூதாவுத்.
“குறி சொல்பவனும் அதைக் கேட்பவனும், எதிர்காலத்தை கணித்துக் கூறுபவனும் அதைக் கேட்பவனும், சூன்யம் செய்பவனும், அதைச் செய்யச் சொன்னவனும் நம்மைச் சார்ந்தவன் இல்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அல் பஸ்ஸார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
3) கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் நன்மை செய்வதாக நம்புதல்!
நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவு மழை பொழிந்த பின் ஹுதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்கு ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி ‘உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்று அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘என்னுடைய அடியார்களில் என்னை நம்பியவர்களும் என்னை நிராகரிப்பவர்களும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளால், அவனுடைய கருணையால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நம்பியவர். நட்சத்திரங்களை நிராகரித்தவர். இன்னின்ன நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நிராகரித்து நட்சத்திரங்களை நம்பியவர்” என்று அல்லாஹ் கூறினான்” எனக் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: ஸைத் இப்னு காலித் (ரலி), ஆதாரம்: புஹாரி
4) பாதுகாப்பு வேண்டி தாயத்து, கயிறு, வளையம் அணிதல்!
நபி (ஸல்) அவர்களுடன் சில பயணங்களில் நான் சென்றிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு தூதுவரை அனுப்பி ஒட்டகக் கழுத்தில் (கண் திருஷ்டிக்காகக் கட்டப்பட்டு) உள்ள வில் கயிற்றினாலான மாலையை அல்லது (வில் கயிற்றினாலான மாலையென குறிப்பிடாது பொதுவான) எந்த மாலையையும் துண்டிக்காமல் நீர் விட்டு விட வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் அம்மனிதருக்கு கூறியதாக அபூபஷீர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். (புகாரி)
(ஷிர்க்கான வார்த்தைகளைக் கூறி) மந்திரித்தல், தாயத்துகள், (ஏலஸ்கள் கட்டுதல். தாவீசுகள்) திவலாக்கள் ஆகிய அனைத்தும் ஷிர்க்காகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத், அபூதாவூத்)
5) துர்ச்சகுனம் பார்த்தல்!
(இஸ்லாத்தில்) தொற்றுநோய் என்பதில்லை; துர்ச்சகுனம் பார்ப்பது கூடாது; ஆந்தை சாஸ்திரம் பார்ப்பதும் கூடாது; சஃபர் என்பதும் கிடையாது; நட்சத்திர சகுனம் பார்ப்பதும் கூடாது; கொள்ளி வாய்ப் பிசாசுமில்லை’ என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹூரைரா - (ரலி) நூல்: புகாரீ, முஸ்லிம்
எவர் ஒருவருடைய (அவர்பார்த்த) சகுனம் அவருடைய தேவையை (நிறைவேற்றி முடிப்பதை) விட்டும் திருப்பி விடுகிறதோ அவர் அல்லாஹ்வுக்கு இணைக் கற்பித்து விட்டார்’ என நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதனுடைய பரிகாரமென்ன? என்று (நபித் தோழர்களான) அவாகள் கேட்டார்கள் அ(தற்கு நபிய)வர்கள்
அல்லாஹூம்ம லா கைர இல்லா கைருக்க, வலா தைர இல்லா தைருக்க, வலா இலாஹ இல்லா கைருக்க.
(பொருள்: யாஅல்லாஹ்! உன் நன்மையன்றி வேறு நன்மையில்லை உன் சகுனமின்றி வேறு சகுனமில்லை உன்னையன்றி வணங்கப்படுவதற்கு தகுதியானவன் வேறில்லை) என நீர் வுறுவதாகும் என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: ஃபள்லு இப்னு அப்பாஸ் - ரலி நூல்: அஹ்மது
6) முகஸ்துதி (பிறருக்கு காண்பிப்பதற்காக அமல் செய்தல்)
“நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் - மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை” (அல்-குர்ஆன் 4:142)
‘என்னிடம் தஜ்ஜாலை விடவும் (அவனால் உங்களுக்கு ஏற்படும் தீமையை விடவும்) உங்கள் மீது அதிகம் பயப்படத்தக்க ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் வினவினார்கள். ஆம்! தெரிவியுங்கள் என (தோழர்களான)அவர்கள் கூறினார்கள். அ(தற்கு நபிய)வர்கள், (நான் பெரிதும் உங்கள் மீது பயப்படும் தீங்கு) மறைமுக ஷிர்க்காகும் (அது யாதெனில்) ஒருவர் தொழுகையை நிறைவேற்ற நிற்கிறார். தன்னை மற்றவர் பார்ப்பதை கண்டு தனது தொழுகையை (நீட்டி நிறுத்தி) அழகுபடுத்துகிறார் (முகஸ்துதியான இதுவே மறைமுக ஷிர்க்காகும்) எனக் கூறினார்கள்.
7) காலத்தை ஏசுதல்!
காலத்தைத் திட்டுவதின் மூலம் மனிதர்கள் என்னை சங்கடப்படுத்திவிடுகிறார்கள் காலத்திற்குச் சொந்தக்காரன் நானே! இரவையும் பகலையும் மாறிவரச் செய்பவனும் நானே என அல்லாஹ் கூறியதாக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹூரைரா - ரலி நூல்: புகாரி.
8.) அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்துப்பலியிடுதல்!
‘அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்தவரை அல்லாஹ் சபிப்பானாக’ அறிவிப்பவர் : அலி (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.
9) கப்றுகளில் கட்டங்கள் எழுப்புதல்!
அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும் போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். இவாகளின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும் கெட்வர்கள் அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் புகாரி மற்றும் முஸ்லிம்.
10) கப்றுகளுக்காக விழா நடத்துதல்!
எனது கப்ரை (கந்தூரி) விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கிவிடாதீர்கள். உங்கள் வீடுகளையும் கப்ருகளாக ஆக்கிவிடாதீர்கள். நீங்கள் எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்து சொல்லுங்கள். அது என்னை வந்தடையும் அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: அபூதாவுத்.
11) சமாதி வழிபாடு!
யஹுதிகளும், நஸராக்களும் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடங்களாக ஆக்கிக்கொண்டனர். அல்லாஹ் அவர்களைச் சபிப்பானாக அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்.
“அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே!” (அல்-குர்ஆன் 7:194)
12) அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்துப்பலியிடுதல்!
“உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!” (அல்-குர்ஆன் 108:2)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்தவரை அல்லாஹ் சபிப்பானாக!” அறிவிப்பவர் : அலி (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.
13) அல்லாஹ் அல்லாதவருக்காக நேர்ச்சை செய்தல்!
“இன்னும், செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்; அன்றியும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர்” (அல்-குர்ஆன் 2:270)
“அல்லாஹ்வுக்கு வழிபடுவதை நேர்ச்சை செய்தவர், (அதை நிறைவேற்றி) அவனுக்கு வழிபடுவாராக! அல்லாஹ்வுக்கு மாறுசெய்ய நேர்ச்சை செய்தவர்; (அவ்வாறு அதை நிறை வேற்றி) அவனுக்கு மாறுசெய்ய வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர்; ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர்: ஆயிஷா - ரலியல்லாஹூ அன்ஹு. ஆதாரம் : புகாரீ, அஹ்மது, நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா
14) இறைவனல்லாத பிறரை (அவுலியா, இறைநேசர்கள் போன்றவர்களை) அழைத்து உதவி தேடுதல்!
“கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத - அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது” (அல்-குர்ஆன் 46:5)
“அல்லாஹ்வை விடுத்து அவனுக்கு இணையாக ஒருவரைப் பிரார்த்தித்த நிலையில் எவன் இறந்து விடுகின்றானோ அவன் நரகில் நுழைவார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி.
15) அல்லாஹ் அல்லாதவர் ஹலாலை ஹராமாக்குவதையும் ஹராமை ஹலாலாக்கு வதையும் ஏற்றுக்கொள்ளுதல்!
“(நபியே!) நீர் கூறும்: ‘அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக்கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?” (அல்-குர்ஆன் 10:59)
அதிய்யி பின் ஹாதிம் - ரலி அன்ஹூ அவர்கள் அறிவிக்கிறார்கள் (நான் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தேன் அது சமயம், வேதக்காரர்களான) ‘அவர்கள் அல்லாஹ்வையன்றி தங்களுடைய பாதிரிமார்களையும், தங்களுடைய சந்நியாசிகளையும், மர்யமுடைய மகனார் மஸீஹையும் (தங்கள்) தெய்வங்களாக எடுத்துக் கொண்டனர்’ (9:31) என்ற பொருளுடைய வசனத்தை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதக் கேட்டு, ‘நிச்சயமாக நாங்கள் அவர்களை வணங்குபவர்களாக இருந்ததில்லையே! எனக் கூறினேன்.
அதற்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அ(ந்தக் குருமார்களான)வர்கள் அல்லாஹ் ஹலாலாக்கிய ஒன்றை அவர்கள் ஹராமாக்கி, அதனால் நீங்கள் அதை ஹராமாக்கவில்லையா? மேலும், அல்லாஹ் ஹராமாக்கிய ஒன்றை அவர்கள் ஹலாலாக்கி, அதனால் நீங்கள் அதை ஹலாலாக்கவில்லையா?’ எனக் கேட்டார்கள். ஆம்! என நான் கூறினேன். (ஹலாலாக்குவது மற்றும் ஹராமாக்குவதின் விஷயத்தில் அவர்களை பின்பற்றி நடப்பதான) இதுவே அவர்களை நீங்கள் வணங்குவதாகும் என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நூல்: அஹ்மது.
16) தொழுகையை விட்டுவிடுதல்!
‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. ‘அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. ‘(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம். ‘இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். ‘உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்’ எனக் கூறுவர்). (அல்-குர்ஆன் 74:42-47)
ஒரு முஸ்லிமுக்கும் இணைவைத்தலுக்கும், இறை நிராகரிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவது தான். (ஆதாரம்: முஸ்லிம்)
17) தொழுகையில் பொடுபோக்காக, அலட்சியமாக இருத்தல்!
இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். ” (அல்-குர்ஆன் 107:4-5)
அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். (ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்)
18) அவசர அவசரமாக தொழுதல்!
“முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் : ‘திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்’ என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்? என்று நபித் தோழர்கள் கேட்டனர். ‘தனது ருகூவையும், ஸுஜுதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்’ என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் பதிலளித்தாகள். (அறிவிப்பவர் : அபூகதாதா ரலி, நூற்கள் அஹ்மத், ஹாகிம், தப்ரானி)
“ருகூவை பூரணமாக செய்யாத, ஸஜ்தாவை மிக குறுகிய நேரத்திலும் செய்த ஒருவரைப் பார்த்து, “இந்த நிலையிலேயே தொழக்கூடியவர்கள் இறக்க நேரிட்டால், அவர் முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்களின் மார்க்கத்தை விட்டு விட்டு வேறு மார்க்கத்தை நிலைநாட்டியவராகத்தான் மரணிப்பார்” என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.
19) அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்தல்!
“அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்தவர் இணைவைத்து விட்டார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” அறிவிப்பவர் : இப்னு உமர் (ஸலி), ஆதாரம் : அபூதாவுத், அஹ்மத். (என் தந்தை) உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் பயணிகள் சிலரிடையே இருந்து கொண்டிருந்தபோது அவர்களை அடைந்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள் தம் தந்தையின் மீது சத்தியம் செய்தார்கள். உடனே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்களை அழைத்து, ‘அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் தந்தையர் மீது சத்தியம் செய்வதை அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துவிட்டான். சத்தியம் செய்யமுற்படுபவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது மெளனமாக இருந்துவிடட்டும்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் :இப்னு உமர் (ரலி), ஆதாரம் : புகாரி.
20) வேண்டுமென்றே ஜமாஅத் தொழுகையை தவறவிடுதல்!
நீங்கள் தொழுகையையும் நிலைநாட்டுங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். மேலும் என் முன்னிலையில் (தலை சாய்த்து) ருகூஉ செய்பவர்களுடன் நீஙகளும் சேர்ந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2 : 43)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஜமாஅத்தாகத் தொழுவது தனித்துத் தொழுவதையும் விட இருபத்தி ஏழு மடங்கு சிறப்பிற்குரியதாகும். நான் தொழுகைக்கு ஏவி, தொழுகையை முன்னின்று நடத்துவதற்காக யாரையேனும் நியமித்து விட்டு ஜமாஅத்துத் தொழுகைக்கு வராதோரின் இல்லங்களுக்கு நானே சென்று அவர்கள் அங்கிருக்கும் நிலையில் அவ்வில்லங்களுக்குத் தீ வைக்க விழைகின்றேன். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
21) தொழுகையில் இமாமை முந்துதல்!
முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் “உங்களுடைய செயல்களை இமாமுக்கு முன்னால் ஆக்காதீர்கள்! இமாம் ‘அல்லாஹ் அக்பர்’ என்று கூறினால் நீங்களும் ‘அல்லாஹ் அக்பர்’ என்று சொல்லுங்கள்; இமாம் ‘வலழ்ழாலீன்’ என்று கூறினால் நீங்கள் “ஆமீன்” என்று சொல்லுங்கள்”. மற்றொரு அறிவிப்பில், ‘நிச்சயமாக இமாமைப் பின்பற்ற வேண்டும்’ என்று கூறினார்கள். மேலும், ‘இமாமுக்கு முந்தி தலையை உயர்த்துபவர் மறுமையில் அவருடைய தலையை கழுதையின் தலையைப் போல் அல்லாஹ் ஆக்கிவிடுவான் என்று அவர் பயந்துக்கொள்ள வேண்டாமா?” என்றார்கள்.
22) கொலை செய்தல்!
“எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்” (அல்-குர்ஆன் 4:93)
‘நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்’ (அல்-குர்ஆன் 5:32)
23) விபச்சாரம் செய்தல்!
“நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது” (அல்-குர்ஆன் 17:32)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மூன்று நபர்கள், மறுமைநாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுமுண்டு. அவர்கள் விபச்சாரம் புரியும் வயோதிகன், பொய்யனான அரசன், பெருமையடிக்கும் ஏழை.” (ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம்)
24) ஓரினப் புணர்ச்சி (ஆணும் ஆணும் புணர்ச்சி) செய்தல்!
“மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்); அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: ‘நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து விட்டீர்கள். நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? வழி மறி(த்துப் பிரயாணிகளைக் கொள்ளையடி)க்கவும் செய்கின்றீர்கள்; உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள்’ என்று கூறினார்; அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்: ‘நீர் உண்மையாளரில் (ஒருவராக) இருப்பின் எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக’ என்பது தவிர வேறு எதுவுமில்லை” (அல்-குர்ஆன் 29:28-29)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘லூத் (அலை) சமுதாயத்தினர் செய்த செயலை செய்யக்கூடியவர்களைக் கண்டால் செய்தவனையும் செய்யப்பட்டவனையும் கொன்றுவிடுங்கள்’ அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாம் : அஹ்மத்.
25) வட்டி வாங்குதல், கொடுத்தல், வட்டி சம்பந்தமான தொழில்களில் பணிபுரிதல்!
“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் - முதல் - உங்களுக்குண்டு; (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்” (அல்-குர்ஆன் 2:278-2:279)
“வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியேரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்” அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்.
26) மது அருந்துதல்!
மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். (ஆதாரங்கள் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)
மது அருந்தி போதையடைந்தவனின் நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் அருந்தினால் மறுமை நாளில் ரத்கத்துல் கப்பால் எனும் பானத்தை அல்லாஹ் அவனுக்கு புகட்டுவது கடமையாகிவிட்டது என்று நபி(ஸல்)அவர்கள் கூறியபோது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களே! ரத்கத்துல் கப்பால் என்றால் என்ன? என்று கேட்டனர். அதற்கவர்கள், நரகவாசிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: இப்னுமாஜா)
27) சூதாட்டத்தில் ஈடுபடுதல்!
“(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2: 219)
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 5:90-91)
28) பொய் பேசுதல்!
நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (அல்குர்ஆன் 16:105)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.
29) திருடுதல்!
“திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 5:38)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘திருடுபவனை அல்லாஹ் சபிப்பானாக! ஒரு முட்டையைத் திருடினாலும் அவனுடைய கை துண்டிக்கப்படும். கயிற்றைத் திருடினாலும் அவனுடைய கை துண்டிக்கப்படும்’ அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : புகாரி
30) லஞ்சம் கொடுத்தல், லஞ்சம் வாங்குதல்!
“அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்” (அல்-குர்ஆன் 2:188)
‘லஞ்சம் கொடுப்பவர் மீதும் லஞ்சம் வாங்குபவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக!’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), ஆதாரம் : இப்னுமாஜா.
31) பொய்சாட்சி கூறுதல்!
அபூபக்ரா (ரலி) பெரும் பாவங்களில் மிகப்பெரும் பாவத்தை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள்! அதற்கு நாங்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்றோம். அதற்கவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோரை நிந்திப்பது, என்று கூறினார்கள். சாய்ந்திருந்த அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய்சாட்சி கூறுவதும் தான், அறிந்து கொள்ளுங்கள் பொய் சொல்வதும் பொய்சாட்சி கூறுவதும் தான்’ என்று கூறினார்கள். ‘நிறுத்த மாட்டார்களா? என நாங்கள் கூறும் அளவுக்கு அவற்றை திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்கள். ஆதாரம் : புகாரி.
32) அவதூறு கூறுதல்!
எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள். (அல்-குர்ஆன் 24:4)
எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு. (அல்-குர்ஆன் 24:23)
33) அநாதைகளின் சொத்துக்களை அபகரித்தல்!
“நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள். (அல்-குர்ஆன் 4:10)
‘அழிக்கக் கூடிய ஏழு விஷயங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது நாங்கள் அவை என்னென்ன? என்று கேட்டோம்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், சூனியம் செய்தல், நியாயமாகவேயன்றி அல்லாஹ் ஹராமாக்கிய உயிரை கொலை செய்தல், வட்டியின் மூலம் சாப்பிடுதல், அனாதைகளின் பொருளை சாப்பிடுதல், போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடுதல், கற்புள்ள பேதைப் பெண்களின் மீது அவதூறு கூறுதல்’ என்று பதிலளித்தார்கள்.
34) கர்வம் கொள்ளுதல்!
“நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை” (அல்-குர்ஆன் 4:36)
அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: ‘எவன் தன் தலைமுடியை வாரி அழகுபடுத்தி நல்ல ஆடைகளை அணிந்து கர்வத்துடன் தலை நிமிர்ந்து தன்னில் தானே பூரிப்பு அடைந்த வண்ணம் நடந்து செல்கின்றானோ அவன் பூமியில் திடுமெனச் செருகப்பட்டு மறுமை நாள் வரை அதன் அதலபாதாளத்தில் முட்டி மோதி மூழ்கடிக்கப்பட்டு விடுபவன் போலாவான்’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்)
35) தற்பெருமை, ஆணவம் கொள்ளுதல்!
‘(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்-குர்ஆன் 31:18)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”எவர் தன்னைப் பற்றி பெரிதாக எண்ணுகிறாரோ அல்லது தனது நடையில் ஆணவம் கொள்கிறாரோ அவர் அல்லாஹவை சந்திக்கும் நாளில் அல்லாஹ அவர் மீது கோபம் கொண்ட நிலையில் சந்திப்பார்.” (ஆதாரம் : அல் அதபுல் முஃப்ரத்)
36) அளவு நிறுவையில் மோசடி செய்தல்!
“அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர். ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள். நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா? (அல்-குர்ஆன் 83:1-4)
“மேலும், வானம் - அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான். நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக. ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலை நிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள்” (அல்-குர்ஆன் 55:7-9)
37) பிறர் சொத்தை அபகரித்தல்!
அபூ ஸலமா(ரலி) அறிவித்தார்கள் : “எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் சொன்னார்கள்; அபூ ஸலமாவே! (பிறரின்) நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், ‘ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும்” என்று கூறினார்கள்.
38) மோசடி செய்தல்!
“எந்த நபிக்கும் மோசடி செய்வது கூடாது. எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் செய்ததை இறுதி நாளில் கொண்டு வருவார், அவ்வேளையில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது சம்பாதித்த(தற்குரிய) பலனை(க் குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் எவ்வகையிலும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 3:161)
“நிச்சயமாக அல்லாஹ் மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (அல்-குர்ஆன் 8:58)
39) அநீதி இழைத்தல்!
“அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி), ஆதாரம் : புகாரி.
40) புறம் பேசுதல்!
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)
புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்.(அல்குர்ஆன்.17:81)
0 comments:
Post a Comment