நபி (ஸல்) அவர்கள், ''மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்'' என்று கூறினார்கள். ''யார்? அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''தம் பெற்றோரில் ஒருவரையோ அல்லது அவர்கள் இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவர்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 4987, அஹ்மத் 8201
இவ்வுலகில் இறைவனுக்கு அடித்தபடியாக அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டியவர்களில் முதடம் பெற்றவர்கள் நம்மைப் பெற்றெடுத்த பெற்றோர்கள் தாம். இவர்களுக்கு நல்ல முறையில் பணிவிடை செய்வது பிள்ளைகளின் கடமையாகும்.
''என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். அல்குர்ஆன் 17:23
படைத்தவனுக்குச் செய்யும் கடமைக்குப் பிறகு அடுத்த கடமையாக பெற்றோருக்கு உபகாரம் செய்வதையே இவ்வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இவ்வசனம் பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லும் முக்கியமான வசனமாகும்.
நான் நபி (ஸல்) அவர்களிடம், ''அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?'' என்று கேட்டேன். அவர்கள், ''உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது'' என்றார்கள். ''பிறகு எது?'' என்று கேட்டேன். ''தாய் தந்தையருக்கு நன்மை புரிவது'' என்றார்கள். ''பிறகு எது?'' என்றேன். அவர்கள், ''அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது'' என்று பதிலüத்தார்கள். இவற்றை மட்டுமே என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். இன்னும் அதிகமாக (இது குறித்து) நான் கேட்டிருந்தால் எனக்கு இன்னும் அதிகமாகப் பதிலüத்திருப்பார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்கள்: புகாரி 527, முஸ்லிம் 137
இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமையான தொழுகைக்குப் பிறகு இறைவனுக்கு மிகவும் பிடித்தமான அமல், பெற்றோர்களுக்குப் பணிவிடை செய்வது தான் என்பதை நபிமொழியும் நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
ஆனால் தன்னைப் பெற்றெடுத்து, நல்நிலைக்கு ஆளாக்கிய பெற்றோர்களை பெரும்பாலோர் சரிவர கவனிப்பதில்லை. அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதும் இல்லை. மேலும் திருமணம் முடித்து விட்டால் மனைவியின் பேச்சைக் கேட்டு, பெற்றோர்களை அலட்சியப்படுத்தி விடுகின்றனர். இவ்வாறு செய்வது மிகப் பெரிய குற்றமாகும்.
நபி (ஸல்) அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, கொலை செய்வது, பொய் சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 2653, முஸ்லிம் 144
பெற்றோர்கள் வயோதிகத்தை அடைந்து விட்டால் அவர்களின் நிலையும் இன்னும் மோசமாகி விடுகிறது. வயதாகியதால் ஏற்படும் கோளாறுகள், உடல்நிலை மோசம் என்று பல இன்னல்களுக்கு ஆளாகும் பெற்றோர்களை கவனிக்காமலும் பராமரிக்காமலும் அவர்களுக்கு ஆதரவாக இருக்காமலும் கவனிப்பற்று விடப்படுபவர்கள் அதிகம். மேலும் அவர்களின் தொல்லைகள் தாங்க முடியவில்லை என்று முதியோர் காப்பகங்களில் விடப்பட்ட பெற்றோர்களும் அதிகம்.
வயது கூடும் போது பேச்சில் மாற்றங்கள் ஏற்படும்; கோபம் ஏற்படும். அவர்கள் கோபமாகப் பேசும் போது, தொல்லைகள் தரும் போது பிள்ளைகள் அவற்றைப் பொறுத்துக் கொள்ள வேண்டுமே தவிர இதை ஒரு துன்பமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர்களை ஏசவோ, வெறுக்கவோ கூடாது.
''என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு! அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! ''சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!'' என்று கேட்பீராக! அல்குர்ஆன் 17:23, 24
கோபத்தை ஏற்படுத்தும் வண்ணம் அவர்கள் நடந்து கொண்டாலும் அவர்களை 'சீ' என்று கூட கூறக் கூடாது. மேலும் அவர்களை விரட்டுவதும், மரியாதையில்லாத சொல்லைப் பயன்படுத்துவதும் முற்றிலும் கூடாது என்று வல்ல இறைவன் கட்டளையிடுகின்றான்.
மேலும் அவர்களிடம் அன்போடும், பணிவோடும் நடந்து கொள்ள வேண்டும் என்றும், நாம் சிறுவராக இருக்கும் போது அவர்கள் எப்படி நம்மிடம் அன்போடும் பரிவோடும் நடந்து கொண்டார்களோ அதைப் போன்று இறைவனின் கருணை அவர்களுக்குக் கிடைக்க பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் இவ்வசனம் கட்டளையிடுகிறது.
வயது முதிர்ந்த பெற்றோரைக் கொண்டவர்கள் அவர்களை ஒரு சுமையாகக் கருதாமல் அவர்களுக்குப் பணிவிடை செய்தால் நிச்சயம் சொர்க்கம் செல்ல முடியும். இந்த வாய்பை ஒரு நல்வாய்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதைத் தவற விட்டவன் சொர்க்கம் செல்வதற்குக் கிடைத்த மிகப் பெரிய அரிய வாய்பை தவற விட்டவனாகவே கருதப்படுவான். Source
சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்.(அல்குர்ஆன்.17:81)
0 comments:
Post a Comment