எழுதியவர்: சகோதரர் மௌலவி. பி.ஜெயினுல் ஆபிதீன் அவர்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளில் முக்கியப் பிரமுகர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தாழ்ந்த குலத்தவராகக் கருதப்பட்ட பார்வையற்ற இப்னு உம்மி மக்தூம் என்பார் வந்தார். 'அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அறிவுரை கூறுங்கள்' என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைப் புறக்கணித்து விட்டு அந்தப் பிரமுக ரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் தான் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்கள் நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்டன.
'தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் கடுகடுத்தார். அலட்சி யம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வயச் செல்கிறீர். அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர்' (அல்குர்ஆன்: 80:1-10) நூல்கள் : திர்மிதீ 3254, முஸ்னத் அபீயஃலா 3123
முக்கியமான பிரமுகர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது முக்கியமற்றவர்களை அலட்சியப்படுத்துவது மனிதர்களின் இயல்பாகும். குறிப்பாக, ஆன்மீகத் தலைவர்களிடம் இது அதிகமாகவே காணப்படும். செல்வந்தர்களுடனும், முக்கியப் பிரமுகர்களுடனும் தான் அவர்கள் நெருக்கம் வைத்திருப்பார்கள். அப்போது தான் அவர்கள் மூலம் ஆதாயம் அடைய முடியும்.
இச்சம்பவம் நடந்த கால கட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் வசதியான நிலையில் இருந்தார்கள். ஆதாயம் அடையும் நோக்கத்திற்காக முக்கியப் பிரமுகரிடம் பேசிக் கொண்டிருக்கவில்லை. முக்கியப் பிரமுகர்கள் நல்வழியின் பால் திரும்பினால் மற்றவர்களும் நல்வழிக்கு வருவார்கள் என்ற நோக்கத்தில் தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தில் தான் கண் பார்வையற்ற அந்தத் தோழர் வருகிறார். நபிகள் நாயகத்தின் குரலை வைத்து அங்கே அவர்கள் இருப்பதை அறிந்து கொண்டு அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்கிறார். இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சங்கடப்படுகிறார்கள். 'முக்கியப் பிரமுகர்கள் இது போன்ற நபர்களை மதிக்க மாட்டார்கள். நேரம் தெரியாமல் இவர் இந்த நேரத்தில் வந்து விட்டாரே' என்று முகத்தைக் கடுகடுப்பாக ஆக்கிக் கொள்கிறார்கள். இது மனிதனின் இயல்பு தான்.
வந்தவர் பார்வையற்றவராக இருந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முகம் சுளித்ததை அவர் அறிந்து கொண்டிருக்க முடியாது. அவரை அலட்சியம் செய்ததையும் அவரால் புரிந்து கொண்டிருக்க முடியாது. 'நாம் கூறியது நபிகளின் காதுகளில் விழுந்திருக்காது' என்று தான் அவர் கருதியிருப்பார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முகம் சுளித்ததும், கடுகடுப்படைந்ததும் நபிகள் நாயகத்துக்கு மட்டுமே தெரிந்த விஷயமாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமாக முன் வந்து கூறியதன் காரணமாகவே நமக்கும், உலகத்துக்கும் தெரிய வருகின்றது.
'என் இறைவன் அல்லாஹ் எனது இந்தப் போக்கைக் கண்டித்து விட்டான். நான் முகம் சுளித்ததையும், அலட்சியம் செய்ததையும் இறைவன் தவறென அறிவித்து விட்டான்' என்று மக்கள் மன்றத்தில் அறிவிக்கிறார்கள்.
இது திருக்குர்ஆனில் 80 வது அத்தியாயத்தில் பதிவு செய்யப்பட்டு உலகம் உள்ளளவும் அறிவித்துக் கொண்டிருக்கிறது.
'தான் ஒரு மனிதர் தாம்; மனிதர் என்ற முறையில் தம்மிடமும் தவறுகள் ஏற்படும் என்பதை எந்த நேரத்திலும் அவர்கள் மறுத்ததில்லை; மறைத்ததுமில்லை' என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.
'நான் தவறு செய்தாலும் தவறு தவறு தான்' என்று அறிவித்த ஆன்மீகவாதிகளை உலக வரலாறு கண்டதே இல்லை.
அது மட்டுமின்றி முகச் சுளிப்புக்கு உள்ளானவர் சமுதாயத்தில் மதிப்புக்குரியவர் அல்லர். தாழ்வாகக் கருதப்பட்ட குலத்தைச் சேர்ந்தவர்; வசதியற்றவர்; அற்பமாகக் கருதப்பட்டவர்; பார்வையுமற்றவர்.
பெருந்தன்மையாளர்கள் என்று பெயரெடுத்தவர்கள் கூட ஓரளவு சுமாரான நிலையில் உள்ளவர்களிடம் தான் பெருந்தன்மையைக் கடைப்பிடிப்பார்களே தவிர மிகவும் இழிநிலையை அடைந்தவரிடம் பெருந்தன்மையைக் கடைப்பிடிக்க மாட்டார்கள்.
அற்பத்திலும் அற்பமாகக் கருதப்பட்டவரைக் கூட இந்த மாமனிதர் ஏமாற்ற விரும்பவில்லை. அவரை மதிக்கத் தவறியது தனது குற்றமே என்பதைப் பறைசாற்றுகிறார்கள்.
அது மட்டுமின்றி, கண் பார்வையற்ற இவர் விஷயத்தில் இதன் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்து கொண்ட முறை தான் இதை விடச் சிறப்பானது. இதன் பின்னர் இவரைக் காணும் போதெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரியாதை செலுத்துவார்கள். நூல் : முஸ்னத் அபீ யஃலா 3123
இவர் மூலம் அல்லாஹ் எனக்கு நல்ல அறிவுரை வழங்கினான் என்று அவரை மிகவும் மரியாதையோடு நடத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா சென்று மாமன்னராக உயர்ந்த பின் அமைத்துக் கொண்ட ஆட்சியில் இவருக்கு முக்கியப் பங்கையும் அளித்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போர்க்களம் சென்ற போது இரண்டு தடவை இவரிடம் ஆட்சியை ஒப்படைத்துச் சென்றார்கள். நூல் : அஹ்மத் 11894, 12530, அபூதாவூத் 2542
நபிகள் நாயகத்தின் பள்ளிவாசல் மக்களைத் தொழுகைக்கு அழைக்கும் பணியை பிலால் (ரலி), இப்னு உம்மி மக்தூம் (ரலி) ஆகிய இருவரிடம் தான் நபிகள் நாயகம் (ஸல்) ஒப்படைத்திருந்தார்கள். நூல் : புகாரி 617, 620, 623, 1919, 2656, 7348
இவருக்கு இவ்வளவு உயர்ந்த தகுதியை வழங்கியிருப்பதிருந்து இந்த மாமனிதரின் போத்தனமில்லாத பரிசுத்த ஆன்மீக வாழ்வை அறிந்து கொள்ளலாம்.
மிக எளிதில் மக்களை ஏமாற்ற உதவும் ஆன்மீகத் தலைமையை எவ்வாறு அப்பழுக்கற்றதாக ஆக்கிச் சென்றார்கள் என்பதற்கு மற்றொரு சான்றைப் பாருங்கள்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தளபதியாகக் கலந்து கொண்ட போர்களில் உஹதுப் போரும் ஒன்றாகும். இப்போரில் அவர்களின் பற்கள் உடைக்கப்பட்டன. அவர்களின் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இறைத் தூதரைக் காயப்படுத்தி பற்களையும் உடைத்தவர்கள் எவ்வாறு வெற்றி பெறுவார்கள்' என்று கூறினார்கள். உமக்கு அதிகாரத்தில் எந்தப் பங்குமில்லை என்ற குர்ஆன் வசனம் (3:128) அப்போது அருளப்பட்டது. நூல் : முஸ்லிம் 3346
வேதனைப்படுத்தப்பட்டவர்கள் எதிரிகளைக் குறித்து இவ்வாறு கூறுவது சாதாரணமான ஒன்று தான். இறைத் தூதரைக் காயப்படுத்தியவர்கள் எவ்வாறு வெற்றி பெறுவார்கள் என்று அவர்கள் பயன்படுத்திய வாசகத்தை இந்த வகையில் குறை கூற முடியாது. 'தனக்கு ஏதோ ஆற்றல் இருப்பதாகவும் தன்னுடன் மோதியவர்களைச் சபித்தே அழித்து விடுவேன் என்பது போன்ற ஆன்மீக ஆணவமும் இந்தச் சொற்றொடரில் இல்லை. இது ஒரு வேதனையின் வெளிப்பாடு தானே தவிர வேறு இல்லை' என்று தான் நாம் நினைப்போம். ஆனால், இறைவன் இதை விரும்பவில்லை.
இறைத் தூதரைக் காயப்படுத்தினால் காயப்படுத்தியவர்கள் தோல்வியைத் தான் தழுவ வேண்டும் என்பதில்லை. இறைவன் நாடினால் இத்தகைய கொடூரமானவர்களுக்கும் இவ்வுலகில் வெற்றியை வழங்குவான். மறுமையில் தான் இவர்களுக்கான சரியான தண்டனை கிடைக்கும்.
இறைத் தூதரைத் தாக்குவதோ, ஆதரிப்பதோ இவ்வுலகின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்காது. அது இறைவனாக எடுக்கின்ற முடிவாகும். இது தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடு. இதை போதிக்கத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்திய சொற்றொடர் இந்த அடிப்படைக்கு எதிரானது என்று இறைவன் கருதுகிறான். தமக்கு இறைத் தன்மை உள்ளது என்பதை அறிவிப்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தா விட்டாலும், வேதனையின் வெளிப்பாடாகவே இருந்தாலும் இறைவன் இந்த வார்த்தைப் பிரயோகத்தைக் கூட விரும்பவில்லை. தனது அதிகாரத்தில் தலையிடுவதாக இறைவன் எடுத்துக் கொள்கிறான். எனவே தான் முஹம்மதே அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை என்று அறிவுறுத்துகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்ட வேதனையை விட அவர்கள் கடவுளாகக் கருதப்படும் வாசலை முழுமையாக அடைக்க வேண்டும் என்பதில் தான் இறைவன் கவனம் செலுத்தினான்.
'யாராவது இவரிடம் மோதினால் தோல்வி நிச்சயம்' என்ற நிலை ஏற்பட்டால் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிற அதிகாரம் இறைத் தூதரிடமும் உள்ளது என்ற நிலை ஏற்பட்டு விடும். எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்ற நேரத்திலும் அதை விட முக்கியமான இந்த அறிவுரையை வழங்குகிறான்.
'இவர்கள் எப்படி வெற்றி பெறுவார்கள்' என்று வேதனை தாள முடியாமல் கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடுத்த சில நிமிடங்களில் இறைவனின் இந்தக் கட்டளையையும் மக்களுக்குத் தெரிவிக்கிறார்கள்.
என்னைத் தாக்கியவர்கள் எப்படி வெற்றி பெறுவார்கள் என நான் கூறியது தவறு தான். இதை இறைவன் தான் முடிவு செய்ய வேண்டும். என்னை என் இறைவன் கண்டித்து விட்டான் என்று அந்த வேதனையிலும் மக்களிடம் தெரிவித்து விடுகிறார்கள்.
(குர்ஆன் என்பது அவர்களாகக் கற்பனை செய்து கொண்டதாக இருந்தால் இந்த வேதனையான நேரத்தில் இப்படிக் கற்பனை செய்து தன்னைத் தானே எவரும் கண்டித்துக் கொள்ளவே மாட்டார். இயல்பாகவே இது சாத்தியமாகாது. திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வேதம் தான் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரமாக அமைந்துள்ளது தனி விஷயம்.)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முதல் மனைவி கதீஜா (ரலி) மூலம் அவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகளும், சில ஆண் குழந்தைகளும் பிறந்தனர். ஆனாலும், ஆண் குழந்தைகள் அனைவரும் சிறு பிராயத்திலேயே மரணித்து விட நான்கு பெண் மக்கள் மாத்திரமே அவர்களுக்கு இருந்தனர்.
மதீனாவுக்கு வந்து அங்கே மாபெரும் சாம்ராஜ்யத்தை நிறுவிய பின் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தமது பாட்டனார் இப்ராஹீம் நபியின் பெயரை அக் குழந்தைக்குச் சூட்டி மகிழ்ந்தார்கள்.
நான்கு பெண் குழந்தைகளுக்கு மத்தியில் ஒரு ஆண் குழந்தை பிறந்ததால் எல்லா தந்தையரும் மகிழ்ச்சியடைவதைப் போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால், ஆண் குழந்தையைக் கொடுத்த இறைவன் சிறு வயதிலேயே அக்குழந்தையைத் தன் வசம் எடுத்துக் கொண்டான்.
பதினாறு மாதக் குழந்தையாக இருந்த போது நபிகள் நாயகத்தின் மகன் இப்ராஹீம் இறந்தார். நூல் : அஹ்மத் 17760
இக்குழந்தை மீது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வைத்திருந்த அன்பைப் பின் வரும் ஹதீஸிருந்து நாம் அறியலாம்.
அனஸ் பின் மாக் (ரலி) அவர்கள் கூறியதாவது...இப்ராஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்த நேரத்தில் நாங்கள் நுழைந்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. 'அல்லாஹ்வின் தூதரே நீங்களுமா?' என்று அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இது இரக்க உணர்வாகும்' என்று கூறி விட்டு மீண்டும் அழுதார்கள். 'கண்கள் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றன; உள்ளம் வேதனைப்படுகிறது; எங்கள் இறைவனுக்குப் பிடிக்காத எதையும் நாம் பேச மாட்டோம்; இப்ராஹீமே! உமது பிரிவுக்காக நாம் கவலைப்படுகிறோம்' என்றும் கூறினார்கள். நூல் : புகாரி : 1303
தமது ஆண் குழந்தை இறந்ததற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த அளவு கவலைப்பட்டார்கள் என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். இந்த நாளில் மதீனா நகரில் சூரியக் கிரகணம் ஏற்பட்டது.
சூரிய, சந்திர கிரகணம் எதனால் ஏற்படுகிறது என்ற அறிவு அன்றைய மக்களுக்கு இருந்ததில்லை. உலகில் முக்கியமான யாரோ ஒருவர் மரணித்து விட்டார் என்பதைச் சொல்வதற்கே கிரகணம் ஏற்படுகிறது என்பது தான் கிரகணத்தைப் பற்றி அவர்களுக்கு இருந்த அறிவு.
யார் இறந்து விட்டார் என்பது அவர்களுக்குத் தெரியாவிட்டாலும் உலகின் ஏதோ ஒரு பகுதியில் யாரோ ஒரு முக்கியமானவர் மறைந்து விட்டார் என்று நினைத்துக் கொள்வார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் மரணித்தவுடன் கிரகணம் ஏற்பட்டதால் இப்ராஹீமின் மரணத்திற்காகவே இது நிகழ்ந்துள்ளது என்று மக்கள் பரவலாகப் பேசிக் கொண்டனர்.
மக்கள் பேசிக் கொள்வது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காதுகளிலும் விழுந்தது. அவர்கள் இதைக் கண்டு கொள்ளாமல் விட்டிருக்கலாம். இதனால் அவர்களது மதிப்பு உயரும். நபிகள் நாயகத்தின் மகனுக்கே சூரிய கிரகணம் ஏற்படுகிறது என்றால் இவர் எவ்வளவு ஆற்றல் மிக்கவராக இருக்க வேண்டுமென்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்படும்.
மக்கள் இது போல் பரவலாகப் பேசிக் கொண்டது தெரிய வந்தாலும் அதைக் கண்டிக்கின்ற மனநிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருக்கவில்லை.
சாதாரண நேரத்தில் தவறுகளை உடனுக்குடன் தயவு தாட்சண்ய மின்றி கண்டிக்கின்ற எத்தனையோ பேர், சோகத்தில் மூழ்கிக் கிடக்கும் போது தமது கண் முன்னே நடக்கின்ற தவறுகளைக் கண்டு கொள்ளாது இருந்து விடுவார்கள். தவறைக் கண்டிப்பதை விட முக்கியமான இழப்பு அவர்களுக்கு ஏற்பட்டிருப்பதே இதற்குக் காரணம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இது போன்ற கவலையில் தான் இருந்தார்கள். ஆனால், தமக்கு ஏற்பட்ட மாபெரும் துன்பத்தை விட மக்கள் அறியாமையில் விழுவது தான் அவர்களுக்கு மிகப் பெரிய துன்பமாகத் தெரிகின்றது. உடனே மக்களைக் கூட்டி அவர்களின் அறியாமையை அகற்றுகிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களது மகன்) இப்ராஹீம் மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'எவரது மரணத்திற்காகவோ, வாழ்வுக்காகவோ சூரிய, சந்திர கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே, நீங்கள் (கிரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள். நூல் : புகாரி: 1043, 1061, 1063
இது போன்ற நிகழ்ச்சிகள் யாருடைய மரணத்திற்காகவும் ஏற்படாது. யாருடைய பிறப்பிற்காகவும் ஏற்படாது எனக் கூறி தமது மகனின் மரணத்துக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவிக்கிறார்கள்.
ஒரு அரசியல் தலைவர் ஒரு ஊருக்கு வந்தவுடன் மழை பெய்தது என்றால் மகராசன், அல்லது மகராசி வந்தவுடன் மழை பொழிகிறது என்று மக்கள் கூறுகின்றனர். அந்தத் தலைவரை மேடையில் வைத்துக் கொண்டே இவ்வாறு புகழ்ந்து பேசுகின்றனர்.
இதைக் கேட்கின்ற அவர் முகத்தில் தான் எத்தனை பிரகாசம்! பகுத்தறிவு பேசும் தலைவரும், அதை எதிர்க்கும் தலைவரும் இதில் சமமானவர்களாகவே உள்ளனர். தெய்வீக அம்சம் அற்றவர்கள் எனக் கருதப்படும் அரசியல் தலைவருக்கே இந்த வார்த்தை இனிக்கிறது என்றால் ஆன்மீகத் தலைமையை என்னவென்பது?
ஆனால், இந்த ஆன்மீகத் தலைவரோ இதைக் கேட்டு அருவருப்படைகிறார். நானே நாளை மறையும் போது இத்தகைய நிகழ்வு ஏற்பட்டாலும் அதற்கு என் மரணம் காரணம் அல்ல என்ற கருத்தையும் உள்ளடக்கி அறிவுரை கூறுகிறார். அதுவும் தமது சோகத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு மக்களுக்கு ஏற்பட்ட அறியாமைத் துன்பத்தை அகற்றிட முன்னுரிமை தருகிறார்.
உலக வரலாற்றில் இத்தகைய அற்புத மனிதரை யாரேனும் கண்டதுண்டா?தேடித் தேடிப் பார்த்தாலும் எள்ளின் முனையளவு கூட மக்களை ஏமாற்றாதவராக இவர் மட்டும் தான் தென்படுகிறார். ஏமாற்றுவதற்கு எல்லா விதமான வாய்ப்புகள் இருந்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுகிறார்.
அன்பு மேட்டு அல்லது அறியாமையின் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் வரம்பு மீறிப் புகழும் விதமாக சில வார்த்தைகளைப் பயன்படுத்தி விடுவதுண்டு. அல்லது வரம்பு மீறி நடந்து கொள்வதுண்டு. இது போன்ற எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம் மக்களை எச்சரிக்காது இருந்ததில்லை. தம்மை மனித நிலைக்கு மேல் உயர்த்த வேண்டாம் என்று அறிவுரை கூறி அவர்களின் அறிவை மேம்படுத்தாமல் இருந்ததில்லை.
நாம் மதிக்கின்ற ஒரு மனிதர் இன்று மழை பெய்யும் போல் தெரிகிறதே எனக் கூறுவார். பல நேரங்களில் அவர் கூறுவது போல் நடக்கா விட்டாலும் சில நேரங்களில் அவ்வாறு நடந்து விடுவதுண்டு. 'நீங்கள் கூறியவாறு மழை பெய்து விட்டதே' என்று அவரிடம் நாம் குறிப்பிடுவோம். அவர் எதைக் கூறினாலும் அது நடந்தே தீரும் என்ற எண்ணத்தில் நாம் அவ்வாறு கூறுவதில்லை. இந்த முறை அவர் கூறியது போல் தற்செயலாக நடந்து விட்டது என்று உணர்ந்து தான் இவ்வாறு கூறுகிறோம்.
இது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைச் செய்தியின் அடிப்படையில் அறிவித்த அனைத்தும் நிறைவேறின. இறைச் செய்தியின் அடிப்படையில் இல்லாமல் மனிதர் என்ற முறையில் ஊகம் செய்து கூறிய விஷயங்களில் சில விஷயங்கள் நடந்து விடும். இது போன்ற சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகத்தின் தோழர்கள் 'இது அல்லாஹ் நினைத்ததும், நீங்கள் நினைத்ததுமாகும்' என்ற கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
மரியாதை வைத்திருக்கின்ற மனிதரைப் பற்றி நாம் கூறும் சொல்லை விட நபித் தோழர்களின் இந்தக் கூற்று இறை நினைவுக்கு நெருக்கமானதாகும். ஏனெனில் 'நீங்கள் கூறியபடி நடந்து விட்டதே' என்று தான் நாம் குறிப்பிடுவோம். 'அல்லாஹ்வும், நீங்களும் நினைத்த படி' எனக் கூற மாட்டோம். ஆனால், நபித்தோழர்கள் 'அல்லாஹ் நினைத்தபடியும் நீங்கள் நினைத்தபடியும் நடந்து விட்டது' எனக் கூறி அல்லாஹ்வை முன்னிலைப்படுத்தினார்கள்.
அல்லாஹ்வை முதல் கூறி விட்டு அதன் பின்னர் நபிகள் நாயகத்தைக் கூறியதாலும், அந்த மக்களின் இதயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெய்வீக அம்சம் கொண்டவர்கள் அல்ல என்பது ஆழமாகப் பதிந்திருந்ததாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இந்த வார்த்தைப் பிரயோகத்தைத் தடை செய்யாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் பின்வரும் நிகழ்ச்சி நடந்தது.
'ஒரு பாதிரியார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். 'முஹம்மதே! நீங்கள் (கடவுளுக்கு) இணை கற்பிக்காமல் இருந்தால் நீங்கள் தான் சிறந்த சமுதாயம்' என்று அவர் கூறினார். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன் என்பது இதன் பொருள். ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் போது இவ் வாறு கூறுவது வழக்கம்) என்று ஆச்சரியத்துடன் கூறி விட்டு 'அது என்ன?' என்று வினவினார்கள். அதற்கு அந்தப் பாதிரியார் 'நீங்கள் சத்தியம் செய்யும் போது கஃபாவின் மீது ஆணையாக எனக் கூறுகிறீர் களே அது தான்' என்று அவர் விளக்கினார். சற்று நேரம் மவுனமாக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இனி மேல் சத்தியம் செய்வதாக இருந்தால் கஃபாவின் எஜமான் மீது ஆணையாக' எனக் கூறுங்கள் என்று (முஸ்லிம்களுக்குக்) கூறினார்கள். பின்னர் அந்தப் பாதிரியார் 'முஹம்மதே, நீங்கள் அல்லாஹ்வுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்யாமல் இருந்தால் நீங்கள் தான் சிறந்த சமுதாயம்' என்று கூறினார். 'சுப்ஹானல்லாஹ்' என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அது என்ன?' என்ற கேட்டார்கள். 'இது அல்லாஹ் நினைத்ததும் நீங்கள் நினைத்ததுமாகும் என்று கூறுகிறீர்களே அது தான்' என்று அவர் விடையளித்தார். சற்று நேரம் மவுனமாக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இவர் விமர்சித்து விட்டார். எனவே, இனி மேல் யாரேனும் 'அல்லாஹ் நினைத்த படி' என்று கூறினால் சற்று இடைவெளி விட்டு 'பின்னர் நீங்கள் நினைத்தீர்கள்' என்று கூறுங்கள் என்று (முஸ்லிம்களுக்குக்) கூறினார்கள். நூல் : அஹ்மத் 25845
'இது அல்லாஹ் நினைத்ததும் நீங்கள் நினைத்ததுமாகும்' என்று கூறுவதன் மூலம் நபித் தோழர்கள் அல்லாஹ்வுக்கு நிகராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கருதவில்லை. ஆயினும், அந்த வார்த்தைப் பிரயோகம் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது போல் உள்ளதாக மாற்று மதத்தவர் ஒருவர் சுட்டிக் காட்டுகிறார். இதை ஏற்றுக் கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இது அல்லாஹ் நினைத்ததாகும். பின்னர் நீங்கள் நினைத்தீர்கள்' என்று கூறுமாறு கட்டளையிடுகிறார்கள்.
விபரீதமான எண்ணத்தில் நபித் தோழர்கள் கூறியிருந்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்பத்திலேயே தடை செய்திருப்பார்கள்.
ஆயினும், வார்த்தை அமைப்பு நபிகள் நாயகத்தையும், அல்லாஹ்வையும் சமமாக ஆக்குவது போல் இருப்பதாகச் சுட்டிக் காட்டப்பட்டவுடன் அதில் உள்ள நியாயத்தை ஏற்கிறார்கள்.
'ஐயா! பாதிரியாரே! நாங்கள் அந்த எண்ணத்தில் அவ்வாறு கூறவில்லை' என்று வாதம் செய்திருக்க முடியும். ஆன்மீகத் தலைவர் என்பதால் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர் என்று சாதித்திருக்க முடியும். அப்படித் தான் ஆன்மீகத் தலைவர்கள் சாதித்து வரு கின்றனர். அவ்வாறு சாதிக்காமல் அந்த வார்த்தைகள் தவிர்க்கப்பட வேண்டியவை என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் பின்னர் இந்த நிகழ்ச்சியை அறியாதவர் யாரேனும் பழைய வழக்கப்படி பேசினால் அதைக் கடுமையாகக் கண்டித்து விடுவார்கள்.
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் 'இது அல்லாஹ் நினைத்ததும் நீங்கள் நினைத்ததுமாகும்' என்று கூறினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'என்னையும், அல்லாஹ்வையும் நீ சமமாக ஆக்குகிறாயா? அவ்வாறில்லை. அல்லாஹ் மட்டும் நினைத்தது தான் இது' என்று கூறினார்கள். நூல் : அஹ்மத் 1742, 1863, 2430, 3077
'இது அல்லாஹ் நினைத்தது தான். பின்னர், நீங்கள் நினைத்தீர்கள்' என்ற சொற்றொடரை தமக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் எனக் கூறாமல் இது போன்று யாருக்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று பொது அனுமதியும் கொடுக்கிறார்கள்.
'இது அல்லாஹ் நினைத்ததும் இன்னார் நினைத்ததுமாகும் என்று கூறாதீர்கள். மாறாக இது அல்லாஹ் நினைத்தது தான். பின்னர் இன்னார் நினைத்தார் எனக் கூறுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்கள் : அபூதாவூத் 4328, அஹ்மத் 22179, 22257, 22292
எந்தச் சொல்லைத் தமக்குப் பயன்படுத்தலாம் என அனுமதித்தார்களோ அதை எந்த மனிதருக்கும் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கிறார்கள்.
ஆன்மீகத் தலைவர்கள் என்று கருதப்படுவோருக்கு மற்றவர்களுக்குச் செய்யப்படுவதை விட அதிகப்படியான மரியாதை செய்யப்படுவது உலகெங்கும் காணப்படும் வழக்கமாகவுள்ளது.
நாட்டின் அதிபரே ஆனாலும் அவரால் மதிக்கப்படும் ஆன்மீகத் தலைவரின் முன்னால் கைகட்டி நிற்கும் நிலையை நாம் சர்வ சாதாரணமாகப் பார்க்கிறோம். நாட்டின் மிக உயர்ந்த அதிகாரம் வழங்கப்பட்டவர்கள் ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிடும் காட்சியையும் காண்கிறோம்.
அன்று முதல் இன்று வரை உலகெங்கும் காணப்படும் நிலை இது தான்.
ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிடுவது, அவர்களின் கால்களைக் கழுவி, கழுவப்பட்ட தண்ணீரை பக்தியுடன் அருந்துவது என்றெல்லாம் ஆன்மீகத் தலைவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
அரசியல் தலைவர்களுக்கு இது போன்ற மரியாதை செய்யப்படும் போது அவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதை நாம் மன்னித்து விடலாம். ஆனால், ஆன்மீகத் தலைவர்கள் இத்தகைய மரியாதையை ஏற்றுக் கொள்வதை மன்னிக்க முடியாது. ஆன்மீகத் தலைவர் என்பவர் மற்றவர்களை விட அதிகம் பக்குவப்பட்டவராக இருத்தல் அவசியம்.
மற்றவர்கள் மரியாதையை எதிர்பார்ப்பது போல் ஆன்மீகத் தலைவர் எதிர்பார்க்கக் கூடாது. மற்றவர்களை விட அதிகமான அடக்கம் அவரிடம் காணப்படுதல் வேண்டும்.
மக்களிடம் அதிகமான மரியாதையை எதிர்பார்ப்பவர் நிச்சயம் மனப்பக்குவம் அடையவில்லை என்பது தான் பொருள். அறிவுடைய மக்கள் இப்படித் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், இந்த அடிப்படை அறிவு கூட பெரும்பாலான மக்களுக்கும் இல்லை. ஆன்மீகத் தலைவர்களுக்கும் இல்லை. உலகிலேயே இதை உறுதியாகக் கடைப்பிடித்த ஒரே ஆன்மீகத் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ் நாளில் ஒருக்காலும் தமது கால்களில் விழுந்து மக்கள் கும்பிடுவதை விரும்பவில்லை. அறியாத சிலர் அவ்வாறு செய்ய முயன்ற போது கடுமையாக அதைத் தடுக்காமலும் இருந்ததில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்.
நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். 'இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்' என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்' என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் '(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?' எனக் கேட்டார்கள். 'மாட்டேன்' என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்யிருப்பேன்' என்று கூறினார்கள்.அறிவிப்பவர் : கைஸ் பின் ஸஅத் (ரலி), நூல் : அபூதாவூத் 1828
தமது காலில் விழுவதற்கு அனுமதி கேட்கப்பட்ட போது 'எந்த மனிதரும் எந்த மனிதரின் காலும் விழக் கூடாது' என்று பொதுவான விதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காரணம் காட்டுகிறார்கள். காலில் விழுபவரும், விழப்படுபவரும் இருவருமே மனிதர்கள் தான் என்று கூறி சிரம் பணிதல் கடவுளுக்கு மட்டுமே உரியது எனக் கூறுகிறார்கள்.
உலகம் முழுவதும் கணவர் காலில் மனைவியர் விழுவது அன்றைக்கு வழக்கமாக இருந்தது. அதையே நான் அனுமதிக்காத போது என் காலில் எப்படி விழலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
ஆன்மீகத் தலைவர்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவோரைக் கண்டித்து எத்தனையோ சீர்திருத்த வாதிகள் இங்கே போராடியதுண்டு. ஆன்மீகவாதிகளின் முகத்திரையைக் கிழித்துக் காட்டியதுண்டு. ஆனால், அது போன்ற மரியாதை தங்கள் அபிமானிகளால் தங்களுக்குச் செய்யப்படும் போது அதை அவர்கள் இன்முகத்துடன் ஏற்றுக் கொள்வதை நாம் பார்க்கிறோம்.
வாழும் போதே தமக்குச் சிலை அமைத்த சீர்திருத்தவாதிகளையும், அறியாத மக்கள் தமக்குச் சிலை வைக்கும் போது அதைத் தடுக்காமல் மகிழ்ச்சியடைந்த தலைவர்களையும், தமது மரணத்திற்குப் பின் தமக்குச் சிலை அமைக்க வலியுறுத்திச் சென்றவர்களையும் பார்க்கிறோம். இவர்கள் எதை எதிர்த்தார்களோ அதே காரியம் தமக்குச் செய்யப்படும் போது ஏற்றுக் கொண்டனர். நம்பகத் தன்மையை இதனால் இழந்தனர்.
ஆனால் ஆன்மீகத் தலைவராக இருந்து கொண்டே இந்தச் சீர்திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்திய ஒரே தலைவர் நபிகள் நாயகமே.
உங்கள் கால்களில் நாங்கள் விழுகிறோமே என்று மக்கள் கேட்கும் போது தமது மரணத்திற்குப் பிறகு தனது அடக்கத் தலத்தில் விழுந்து பணிவார்களோ என்று அஞ்சி அதையும் தடுக்கிறார்கள். எனது மரணத்திற்குப் பின் எனது அடக்கத் தலத்தில் கும்பிடாதீர்கள் என்று வாழும் போதே எச்சரித்துச் சென்றனர்.
எனது அடக்கத்தலத்தை வணக்கத் தலமாக ஆக்கி விடாதே என்று (மக்களுக்குத் தெரியும் வகையில்) இறைவனிடம் நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்தனை செய்தார்கள். நூல் : அஹ்மத்: 7054
எனது அடக்கத்தலத்தில் எந்த நினைவு விழாவும் நடத்தாதீர்கள்! நூல்கள் : அபூதாவூத்: 1746 அஹ்மத் 8449
யூதர்களும், கிறித்தவர்களும் தங்கள் இறைத் தூதர்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கி விட்டனர். இதனால் அவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் ஏற்படும் என்று தமது மரணப் படுக்கை யில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தனர். நூல் : புகாரி 436, 1330, 1390, 3454, 4441, 4444, 5816
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு எச்சரிக்கை செய்யாவிட்டால் அவர்களின் அடக்கத் தலத்தையும் உயர்த்திக் கட்டியிருப்பார்கள் என நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார். நூல் : புகாரி 1330, 1390, 4441
பதினான்கு நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் அவர்களின் அடக்கத்தலத்தில் இன்று வரை எந்த நினைவு நாளும் அனுசரிக்கப்படுவதில்லை. அடக்கத்தலத்தில் எவரும் விழுந்து கும்பிடுவதில்லை. இந்த அளவுக்குத் தெளிவான எச்சரிக்கை விடுத்து மனித குலம் முழுமையாக நம்புவதற்கு ஏற்ற ஒரே தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) பிரகாசிக்கிறார்கள்.
ஆதாரம்
http://onlinepj.com/books/mamanithar/
http://iniyamaarkam.blogspot.com/
சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்.(அல்குர்ஆன்.17:81)
Monday, September 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அஸ்ஸலாமு அழைக்கும் .தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் ஐகாட் கிளை சார்பாக www.icadtntj.blogspot.com என்ற இணையதளத்தை நடத்தி வருகின்றோம் .இதனையும் தவ்ஹீத் தளங்கள் பட்டியலில் சேர்க்கவும் நன்றி.
by blogmaster
Your Blog address is added. Salam.
Post a Comment