Wednesday, July 28, 2010

அபூபக்கர் (ரலி) யின் அறிவு கூர்மை! ‎

நபி(ஸல்) அவர்களால் சொர்க்கத்துக்கு நன்மாராயம் கூறப்பட்ட பத்து நபர்களில் முதல் நபர் ‎அபூபக்கர் (ரலி) அவர்கள். நபி(ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எடுத்து சொல்லிக்கொண்டிருந்த ‎ஆரம்ப கால கட்டத்தில் பலரும் தயங்கும்போது தைரியமாக இஸ்லாத்தை ஏற்று தன்னுடைய ‎செல்வங்களையெல்லாம் அதை செலவழித்தவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்கள். இதை இந்த ‎ஹதீஸின் மூலம் நபி(ஸல்) அவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்களை அல்லாஹ்வின் நேசராக்கி ‎வைக்கிறார்கள்.

நம்மிடம் எவருடைய எந்த உதவியும் அதற்குரிய பிரதி அளிக்கப் பெறாமலில்லை. ‎அபூபக்கர் (ரலி) அவர்களின் உதவியைத் தவிர. ஏனெனில் நிச்சயமாக அவர்களின் ஓர் உதவி ‎நம்மீது இருக்கிறது. அதற்குரிய பிரதியை மறுமை நாளின்போது அல்லாஹ் அவர்களுக்கு ‎நல்குவான். அன்றி எவருடைய பொருளும் எனக்கு அவ்வளவு பலன் தரவில்லை. ‎அபூபக்கர்(ரலி) அவர்களுடைய பொருள் பலன் அளித்ததைப்போல, மேலும் நான் இஸ்லாத்தை ‎தழுவுமாறு எடுத்துரைத்த பொழுது எல்லோரும் தயங்கவே செய்தனர். அபூபக்கர்(ரலி) அவர்கள் ‎அதற்கு இணக்கம் தெரிவித்ததைத் தவிர நிச்சயமாக அவர் தயங்கவில்லை. ஒருவேளை நான் ‎எனக்கு ஓர் ஆருயிர்த் தோழரைத் தேர்ந்தெடுப்பதானால் அபூபக்கர்(ரலி) அவர்களையே ‎தேர்ந்தெடுப்பேன்.

அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக உங்களின் தோழர் அல்லாஹ்வின் நேசராவார் என்று ‎நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி) நூல்: திர்மிதீ

ஒருவேளை நான் என் இறைவனைத்தவிர வேரொருவரைத் தோழராகத் தேர்ந்தெடுப்பதாக ‎இருந்தால் அபூபக்கர்(ரலி) அவர்களை தேர்ந்தெடுத்திருப்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் ‎கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதாவூத்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ

நபி(ஸல்) அவர்களுக்கு உடல் நலக்குறை அதிகப்பட்ட பொழுது மக்களுக்கு இமாமாக ‎நின்று தொழவைத்த அல்லாஹ்வின் நேசரான அபூபக்கர்(ரலி) அவர்கள். நபி(ஸல்) அவர்களின் ‎மரணத்திற்குபின் ஏற்பட்ட கடுமையான சோதனையின்போது......

நபி(ஸல்) அவர்கள் இறந்த நேரத்தில் அபூபக்கர்(ரலி) அவர்கள் ஸூன்ஹில் (மதினாவை ‎அடுத்துள்ள சிற்றூர்) இருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று சிலரும், ‎இறக்கவில்லை என்று மீதப் பேர்களும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இறக்கவில்லை என்று ‎சொன்ன கூட்டத்திற்கு உமர்(ரலி) அவர்கள் தலைமை தாங்கினார்கள். அல்லாஹ்வின் மீது ‎ஆனையாக நபி(ஸல்) அவர்கள் இறக்கவில்லை, அன்றி அல்லாஹ் அவர்களை (மயக்கம் ‎தெளிந்தபின்) நிச்சயமாக எழச்செய்வான். நபி(ஸல்) அவர்களை இறந்து போனார்கள் என்று ‎சொன்னவர்களை கை, கால்களை வெட்டுவேன் என்று கூறினார்கள். உமர் ரலியல்லாஹ் ‎அவர்களின் கோபம் தான் நபித் தோழார்களுக்கு நன்கு தெரியுமே. நபி(ஸல்) அவர்களும் ‎மனிதரே; அவர்களுக்கும் மரணம் உண்டு என்பதை அறிந்த சில நபித் தோழர்களும் ‎உமர்(ரலி)க்கு பயந்து கொண்டு பேசாமல் இருந்து விட்டார்கள். அபூபக்கர்(ரலி) அவர்களுக்கு ‎விஷயம் தெரிவிக்கப்பட்டு உடன் வந்தார்கள்.

நபி(ஸல்) அவர்களின் முகத்திலிருந்த துணியை அகற்றிய பின் அவர்களை முத்தமிட்டு, ‎என் தாய், தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தாங்கள் உயிரோடிருந்த போதிலும் ‎மணமுள்ளவர் களாகவே இருந்தீர்கள். இறந்த பின்னரும் மணமுள்ளவர் களாகவே ‎இருக்கிறீர்கள். எவன் கைவசம் என் உயிர் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக அல்லாஹ் ‎உங்களை இரு முறை இறப்பை நுகருமாறு ஒரு போதும் செய்யமாட்டான் என்று கூறிவிட்டு ‎வெளியே வந்து கூடி இருந்த மக்கள் மத்தியில்:

ஆணையிட்டு கூறுவோரை! அமரும்' என்று கூறினார்கள். அபூபக்கர்(ரலி) அவர்கள் ‎பேசத்துவங்கி யதும் உமர்(ரலி) அவர்கள் அமர்ந்துவிட்டனர். பின்னர் அபூபக்கர்(ரலி) அவர்கள் ‎அல்லாஹ்வைப் புகழ்ந்து துதித்த பின் அறிந்து கொள்ளுங்கள்! எவர் முஹம்மது (ஸல்) ‎அவர்களை வணங்கி வந்தார்களோ (அவர்கள் அறிந்து கொள்ளட்டும்) நிச்சயமக ‎முஹம்மது(ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள். அன்றி எவர் அல்லாஹ்வை வணங்கி ‎வந்தார்களோ (அவர்கள் அறிந்து கொள்ளட்டும்) அல்லாஹ் உயிருடன் இருக்கிறான். அவன் ‎இறக்கவே மாட்டான். என்று கூறி:

إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُم مَّيِّتُونَ ‏‎ 

நிச்சயமாக நீரும் இறந்துவிடக் கூடியவரே! நிச்சயமாக அவர்களும் ‎இறந்துவிடக் கூடியவர்கள்தாம் (39:30) என்ற அல்குர்ஆனின் வசனததையும்

وَمَا مُحَمَّدٌ إِلاَّ رَسُولٌ قَدْ خَلَتْ مِن قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَّاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَىَ عَقِبَيْهِ ‏فَلَن يَضُرَّ اللّهَ شَيْئًا وَسَيَجْزِي اللّهُ الشَّاكِرِينَ‎  

முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி ‎‎(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்; அவர் ‎இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால், நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் ‎‎(புறங்காட்டி) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் திரும்பி ‎விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், ‎அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான். (3:144)

பின்னர் மக்கள் வாயடைத்தவர்களாக தேம்பித் தேம்பி அழுதனர். நபி(ஸல்) அவர்கள் ‎மனிதர்தான் - அவர்களும் மரணிப்பவர்களே என்பதை விளக்கும் பல குர்ஆன் வசனங்கள் ‎‎(பார்க்க 40:77, 43:41) இருந்தாலும் 39:30 வசனத்தை குறிப்பிட்டு விட்டு 3:144 வசனத்தையும் ‎குறிப்பிடுகிறார்கள். காரணம் அன்று சிலர் தங்களின் பழைய மார்க்கத்திற்கு போய்விடலாம் ‎என்று இருந்தார்கள். அந்த எண்ணத்திற்கு 3: 144 வசனத்தின் மூலம் சாவு மணி அடித்தார்கள். ‎

நபி(ஸல்) அவர்களை எங்கே அடக்கம் செய்வது என்ற சர்ச்சை எழுந்த போதும் தலமைத் ‎தனத்தை ஏற்றுக் கொள்வதிலும் ஏற்பட்ட பிரச்னையில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ‎முடிவெடுத்து குழப்பங்களைத் தவிர்த்தவர்கள். அவர்கள் ஆட்சி காலமும் மிக சிறப்பாக ‎இருந்ததை வரலாறு இன்றும் அவர்களுக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டிருக்கிறது.‎ Source

0 comments:

Post a Comment